ஒமைக்ரான் பாதித்தவர்களுக்கு ஆக்சிஜன் உதவி தேவைப்படுகிறதா..? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கொரோனா கட்டுப்பாடு வழிமுறைகள் குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

அதில், ‘லேசான கொரோனா அறிகுறி இருப்பவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும் வசதி இருந்தால் அதைப் பின்பற்றி கொள்ள வேண்டும். ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை ஆக்ஸிசன் சுவாச உதவி தேவைப்படவில்லை. .அதனால் மக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம். ஒமைக்ரான் தொற்று உறுதியானவர்கள் யாருக்கும் நுரையீரல் தொற்று ஏற்படவில்லை.

முதல்வரின் அறிவுறுத்தலின்படி 217 ஆக்சிஜன் உருவாக்கும் இயந்திரங்கள் தற்போது தயார் நிலையில் உள்ளன. போதுமான அளவுக்கு ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் கையிருப்பு உள்ளது. பாதிப்பு இதுவரை அதிகம் ஆகவில்லை என்றாலும் இனி வரும் நாட்களில் அதிகரிக்கக்கூடும் என கணித்துள்ளோம். தமிழ்நாட்டில் இன்னும் சில நாட்களில் பாதிப்பு படிப்படியாக உயரும். இதனை உணர்ந்து மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.

கொரோனா பரவலை பொருத்தவரை தொற்று சங்கிலியை உடைக்க தான் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் பயணம் செய்யும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அது மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் இனிமேலும் காலம் தாழ்த்தாமல் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் நோய் அறிகுறியே இல்லாமல், ஆக்சிஜன் அளவும் குறையாமல் இருப்பவர்களுக்கு தொற்று உறுதியானால் மருத்துவமனையில் அனுமதிக்க கூடாது என்று நாங்கள் உத்தரவிட்டுள்ளோம். அவ்வாறு அனுமதித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அதற்கு காரணம், நோய் தீவிரம் அதிகம் உள்ளவர்களுக்கு மருத்துவ சிகிச்சையின் தேவை அதிகம். அதன்படி அறிகுறிகள் மற்றும் ஆக்ஸிஜன் அளவை பொறுத்தே மருத்துவமனைகளில் முன்னுரிமை அளிக்கப்படும்.

அரசின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பெருநகரங்களில் கொரோனாவைக் காட்டிலும் ஒமைக்ரான் தொற்று அதிகமாக பரவி வருகிறது. அதனால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்