‘இது அறிவிக்கப்பட வேண்டிய நோய்’!.. தமிழகத்தில் புதிதாக பரவும் பூஞ்சை தொற்று.. சுகாதாரத்துறை செயலாளர் ‘முக்கிய’ அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் முக்கிய தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் மே 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கருப்பு பூஞ்சை தாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பீகார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த பூஞ்சை தொற்று அதிகமாக காணப்படுகிறது. இந்த பூஞ்சை தொற்று ஏற்பட்டால், கண் பார்வை குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், அதிகளவில் ஸ்டீராய்டு எடுத்துக் கொள்பவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை இந்த கருப்பு பூஞ்சை தாக்குவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் ஹெச்.ஐ.வி, புற்றுநோய், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

கடுமையான தலைவலி, கண்களில் வலி, கண்களில் வீக்கம், கண்கள் சிகப்பாக மாறுதல், திடீரென பார்வை குறைபாடு ஏற்படுதல், சைனஸ் பிரச்சனை, மூக்கில் வலி, வாய் அதனை சுற்றியுள்ள பகுதிகள் கருப்பாக மாறுதல் போன்றவை இதன் அறிகுறிகளாக உள்ளது. இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவர்களை அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கருப்பு பூஞ்சை தொற்றால் தமிழகத்தில் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த சௌந்தரராஜன் என்பவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் கருப்பு பூஞ்சை நோய் தொற்றை ‘அறிவிக்கப்பட வேண்டிய நோய்’ என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய அவர், ‘கருப்பு பூஞ்சை குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. இது புதிதாக உருவான நோய் கிடையாது. உடலில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு, இந்த பாதிப்பு ஏற்கனவே இருந்து வந்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை நோய் தொற்று கண்டறியப்பட்டால், உடனே அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்’ என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்