'வீட்டுக்குள்ள இருந்துட்டா போதும், ஈஸியா தடுக்கலாம்' ... '21 நாட்கள்' ஊரடங்கு ஏன்? ... தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சொன்ன விளக்கம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஊரடங்கை சரியாக பொதுமக்கள் கடைபிடித்தால் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க முடியும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பெரும்பாலான மக்கள் அனைவரும் தங்களது வீடுகளை விட்டு  வெளியில் வராமல் ஊரடங்கை சிறப்பாக கடைபிடித்து வருகின்றனர். இருப்பினும் சில பேர் எந்தவித விழிப்புணர்வும் இல்லாமல் பொதுஇடங்களில் சுற்றி திரிகின்றனர். இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் 'சீனா, இத்தாலி, அமெரிக்கா, ஈரான் போன்ற நாடுகளில் தொடக்கத்தில் மிகக் குறைவாக இருந்த கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு, நாட்கள் செல்ல செல்ல பல மடங்கானது. அது போன்ற ஒரு நிலை நம் நாட்டிற்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக தான் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டுள்ளது' என்றார்.

21 நாட்கள் ஏன் ஊரடங்கு என்பது குறித்து விஜயபாஸ்கர் கூறுகையில், 'கொரோனா வைரஸ் காலம் (incubation period) என்பது மொத்தம் 14 நாட்கள் ஆகும். அதனால் நாம் ஒருவர் 21 நாட்கள் நம்மை தனிமைப்படுத்திக் கொண்டால் நோய் தொற்றை எளிதாகத் தடுக்க முடியும். தற்போது வரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பயணம் செய்ததன் மூலம் ஒருவருக்கொருவர் பரவியது மட்டும் தான். குடும்பம், குழந்தைகளை மறந்து அச்சமில்லாமல் கொரோனா தொற்றைத் தடுக்கப் போராடும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள் என ஒட்டுமொத்த அரசாங்கமும் கடினமாக உழைக்கும்போது நாமும் இந்த ஊரடங்கை சிறப்பாக கடைப்பிடித்தால் நிச்சயம் கொரோனா தொற்றை எளிதாக தடுக்கலாம்' என தெரிவித்துள்ளார்.

 

 

VIJAYABASKAR, TAMILNADU, CORONA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்