முதல்வர் உத்தரவின்பேரில், “72 குண்டுகள் முழங்க எஸ்பிபியின் உடல் நல்லடக்கம்!” - கதறி அழுத ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பாடகர், இசை அமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவு இந்தியாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவரது இறுதிநிகழ்வு காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார். 

இதுபற்றி தமிழக அரசு சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிகையில், “தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அன்னாருக்கு காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” என்று குறிப்பிட்டிருந்தார். 

மத்திய, மாநில அரசுகளின் இந்த முன்னெடுப்புக்கு நன்றி சொல்லும் விதமாக திரை இயக்குநர், நடிகர் பாரதிராஜா, “எங்கள் அன்புக்கும் மரியாதைக்குமுரிய பாரதப்பிரதமர் மோடி அவர்களுக்கும், சாதாரண நிலையில் இருந்து முன்னேறிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும் இந்த தமிழ்த் திரையுலகமே நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறது. நாங்கள் கேட்காமலேயே நீங்கள் அறிவித்திருக்கிற இந்த அறிவிப்பு எங்கள் நெஞ்சில் பால் வார்த்தது போலிருக்கிறது. ஒரு மிகப்பெரிய கலைஞனை அடையாளங்கண்டுகொண்ட மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். அந்த மிகப்பெரிய கலைஞன் இந்தியாவின் எல்லா மொழிகளிலும் பாடியவர், எல்லா மாநிலங்களுக்கும் சொந்தமானவர். அவர் வாங்கிய தேசிய, மாநில, ஆந்திர விருதுகள் எண்ணற்றவை. இத்தனை விருதுகள் வாங்கிய கலைஞன் கொரோனா எனும் கொடிய நோய்க்கு மறைந்ததை நினைத்தால் பதறுகிறது. 

அவர் என்னை பொருத்தவரை மறையவில்லை. நிலமுள்ள அளவும், நீருள்ள அளவும், காற்றுள்ள அளவும் அந்த இசை, பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும். அவர் ஸ்தூல சரீரத்துக்குத்தான் மரணம், அவர் இசைக்கு அல்ல. எம் தலைமுறை, இன்னொரு தலைமுறை, இன்னும் 3,4 தலைமுறை தாண்டியும் உயிருடன் வாழ்ந்துகொண்டிருப்பார். நாங்கள் எடுத்து மரியாதை செய்வது வேறு. ஆனால் அரசு செய்ய வேண்டும் என்று நினைத்தோம். நாங்கள் கேட்பதற்கு முன்னாலேயே நீங்கள் இவ்வாறு அறிவித்ததற்கு நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்” என்று கூறினார்.

இந்நிலையில் அனைவரின் கண்ணீர் அஞ்சலிக்கு நடுவே, அணிவகுத்து நின்ற போலீஸார் அரசு மரியாதை செலுத்தும் வகையில் வானை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட, 72 குண்டுகள் முழங்க எஸ்பிபியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவள்ளூர் எஸ்.பி. அரவிந்தன் முன்னின்று செய்தார். எப்போதும் சாதாரண தொப்பியுடன் இருக்கும் ஆயுதப்படை போலீஸாரும் சீருடையுடன் வந்து எஸ்பிபிக்கு மரியாதை செலுத்தினர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்