'தமிழக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை ஆரம்பிக்கலாம்'... 'தேதியை அறிவித்த அரசு'... பெற்றோர் வர தேவையில்லை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தேதியைத் தமிழக உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் ஜூலை 15 ஆம் தேதி வெளியாகின. இந்த சூழ்நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது தொடங்கும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், 28-ம் தேதி முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடத்தத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை மேற்கொள்வது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி மதிப்பெண் தரவரிசை மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை மேற்கொள்ள வேண்டும். மாணவர் கல்லூரியில் சேருவதற்குத் தேர்வு செய்யப்பட்ட விவரத்தினை 26-ம் தேதியன்று குறுஞ்செய்தி அல்லது தொலைபேசி வாயிலாகத் தெரியப்படுத்த வேண்டும். ஒரே கல்லூரியில் ஒன்றுக்கு மேற்பட்ட பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்து இரண்டு பிரிவுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டால் மாணவர்களின் விருப்பத்தினை கேட்டு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

ஒரு இடத்திற்கு 2 மாணவர்களைத் தேர்வு செய்து 1:2 என்கிற அடிப்படையில் தகுதியின்படி இடங்களை ஒதுக்க வேண்டும். மேலும் சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 28-ம் தேதியும் பொதுப்பிரிவினருக்கு ஆகஸ்ட் 29-ம் தேதி முதல் செப்டம்பர் 4-ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர் சேர்க்கை சமயத்தில் மாணவர்களுடன் பெற்றோர்கள் வரத்தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த ஆண்டு முதல்முறையாகத் தமிழகத்தில் உள்ள 109அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் ஆன்லைன் முறையில் மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள 92,000 இடங்களுக்கு 3,00,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்