'செங்கலுக்கு நோ.. கருங்கல்லுக்கு நோ.. ஒன்லி தெர்மாகோல்'.. அசரவைக்கும் 'ராமர் வீடு’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராமர் என்பவர், தெர்மோகோலைக் கொண்டு வீடு கட்டி வருகிறார்.

1500 சதுர அடி பரப்பளவில் உள்ள இடத்தில் 10 லட்சம் ரூபாய் செலவில், செங்கல், ஹாலோபிளாஸ்க் எதுவுமின்றி முழு வீட்டையும் தெர்மோகோலைக் கொண்டு வீடு கட்டி வருகிறார். செங்கற்களில் வருவது போன்ற கிராக் எதுவும் இதில் வராது என்றும் முதலில் பயந்த பொதுமக்களையும், தன் வீட்டாரையும் போலவே தானும் பயந்ததாகவும், ஆனால் அடித்தளம் போட்டதும் தனக்கும் நம்பிக்கை வந்துவிட்டதாக ராமர் கூறுகிறார்.

கிட்டத்தட்ட 50 சதவீதம் அதாவது 10 அடிக்கு கட்டப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பத்தில் 50 சதவீதம் பொருள் விரையம் இல்லை என்றும், செங்கற்கள், கருங்கற்களும் தேவையில்லை என்றும், தற்போது உண்டாகியுள்ள செங்கற்கள், கருங்கற்கள் தட்டுப்பாட்டுக்கு இது ஏற்றமுறை என்றும் பொறியாளர் ஆனந்தகீதன் கூறுகிறார்.

எடை குறைவானதுதான் இந்த தெர்மாகோல் வீடு என்றாலும் மழை, சூறாவளி, கடும் புயல் போன்ற அனைத்தையும் தாங்கும் சக்தி இதற்கு உண்டு என்றும் ராமரின் வீட்டைக் கட்டும் பொறியாளர் கூறுவது பலரிடையே ஆச்சரியத்தைத் தந்துள்ளது. இதுபற்றி பொறியாளர் ஆனந்த கீதன் பேசும்போது, ‘ஒவ்வொரு பில்டிங் கட்டுமானத்துக்கும் நாங்கள் இதுபோன்ற பேனல்களை கஸ்டமர்களுக்குத் தகுந்தவாறு செய்து கன்ஸ்ட்ரக்‌ஷன் செய்து தருகிறோம்.  வெல்டிங் எல்லாமே ஷார்ட் கட்டிங் செய்து, பிளாஸ்டிரிங் செய்வதால் சுவர் முழுவதுமே கம்பி கான்கிரீட் ஆகிவிடுகிறது. ஆதலால் செங்கல் பில்டிங்கை விடவும் இது அதிக தாங்குதிறன் கொண்டது’ என்று கூறுகிறார்.

இந்த தொழில்நுட்பம் எந்த அளவுக்கு சாத்தியம் என்பது பற்றி கோவையின் முன்னணி தெர்மாகோல் இண்டஸ்ட்ரீ நிறுவனத்தின் நிறுவனர்கள் கஜேந்திரன் மற்றும் லலிதாமணி கூறும்போது, ‘இது முழுமையாக சாத்தியமே. இதற்கு முன்னரே, வீடுகளின் டாப் ரூஃபில் மட்டும் தெர்மாகோலை வைத்து கான்கிரீட் போடும் முறையை நாங்கள் அறிமுகப்படுத்தினோம். ஆனால் முழுமையாக பலகை-கான்கிரீட் மற்றும் செங்கற்கள் அல்லது கருங்கற்கள் வைத்து காரை பூசும் முறையைத் தவிர்த்து கம்பிக்குள் 4-5 இன்ச் வரையிலான தெர்மாகோல்களை வைத்து அதன் மீது கான்கிரீட் போடும் இந்த தொழில்நுட்பம் உண்மையில் வலுவானதுதான். ஏனென்றால் தெர்மாகோல் என்கிற மெட்டீரியலை உருக்காமல் அழிக்க முடியாது என்பதால், இது நீடித்து நிற்கக் கூடியதுதான்’ என்று கூறுகின்றனர்.

மேலும் பேசியவர்கள், ‘அதே சமயம், அறைவெப்பநிலையை சீராக வைத்திருக்கவும் இந்த தொழில்நுட்பம் உதவும். இதில் இயல்பான அடர்த்தி கொண்ட தெர்மாகோலுக்கு 9 கிலோ/ச.மீ அளவில் தொடங்கி தேவைக்கு தகுந்தாற்போல் மாறுபடும். ரூஃப் மற்றும் பக்கவாட்டுச் சுவர் எல்லாவற்றுக்கும் சேர்த்து 300 ஷீட்களை ராமர் பயன்படுத்தியிருக்கலாம், இதற்கு தெர்மாகோலுக்கு மட்டும் குறைந்தபட்சம் 60 ஆயிரம் ரூபாய் செலவு ஆகலாம்’ என்கின்றனர்.

PERAMBALURE, ARCHITECH, CONSTRUCTION, THERMOCOL HOUSE BUILDING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்