'அதிகரிக்கும் கொரோனா'... 'ஊரடங்கு குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டது என்ன'?... வெளியான பரபரப்பு தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அதிகாரிகளுடன் முதல்வர் நடத்திய ஆலோசனையில் என்ன விவாதிக்கப்பட்டது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த வருடத்தின் தொடக்கத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தற்போது வேகமாக மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாகப் பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் தான் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது.

தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பு 6 ஆயிரத்து 500-ஐ எட்டியுள்ளது. தற்போது 41 ஆயிரம் பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். நேற்று மட்டும் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்காரணமாக தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுத்து வருகிறது. கடந்த 8-ந் தேதி தமிழ்நாட்டில் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இருப்பினும் தொடர்ந்து நிலைமை மோசமாகிக் கொண்டே செல்வதால் இன்னும் பல கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதையடுத்து நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உதயகுமார், விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அரசு அமைத்துள்ள கொரோனா தடுப்பு நிபுணர் குழுவினர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதில் பல முக்கியமான விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதிலும் குறிப்பாக 5 அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்கள். புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது, இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது, தடுப்பூசி திட்டத்தைத் தீவிரப்படுத்துவது, பிளஸ்-2 தேர்வைத் தள்ளி வைப்பது, மேலும் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகிய 5 திட்டங்கள் குறித்து முக்கியமாக ஆலோசனை நடத்தினார்கள்.

இதற்கிடையே கடந்த முறை கொரோனா தாக்கம் மோசமாக இருந்தபோது, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதேபோன்று மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் அது பொருளாதார ரீதியாக கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுவிடும். எனவே இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாமா என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் தடுப்பூசி திட்டத்தை இன்னும் வேகப்படுத்தவும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தினார்கள்.

மேலும் சென்னை நகரைப் போலப் பாதிப்பு அதிகமுள்ள மற்ற மாவட்டங்களிலும் தேவையான சிகிச்சை வசதிகளைச் செய்வது, படுக்கைகளை அதிகப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி அடுத்தகட்ட கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், அரசு தன்னிச்சையாக அறிவித்திட முடியாது. தேர்தல் கமி‌ஷனிடம் அனுமதி பெற்று பின்னர் அறிவிக்கப்படும்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்