'அவங்க ரெண்டு பேரும் தான் என் தெய்வம்...' 'ஏரி, குளம், குட்டைகளை தூர்வாரியது எங்கள் ஆட்சி...' - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே, அ.தி.மு.க வேட்பாளர் ஏ.என்.ஆர். பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது,

மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி அளித்தார். விவசாயிகளின் பாதிப்பை உணராமல் அவர்களது நிலங்களை பிடுங்கி தனியாரிடம் ஒப்படைக்க முற்பட்டார்கள். அப்போது, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றாமல் விவசாயிகள் பாதுகாக்கப்பட்டனர்.

                                

ஸ்டாலின் விவசாயிகளின் நிலத்தை பறிக்க நினைத்தார். அந்த ஆபத்திலிருந்து காப்பாற்றியவர் இந்த பழனிசாமி. ஸ்டாலினுக்கு விவசாயிகளைப் பற்றியும், விவசாயத்தைப் பற்றியும் கவலை இல்லை. எனவே, ஸ்டாலினுக்கு விவசாயிகளின் ஓட்டு கூட கிடைக்காது.

2010 காங்கிரஸ் ஆட்சியில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. அதன்பின், ஜெயலலிதா நீட் தேர்வை தடுக்க கடுமையான முயற்சி எடுத்தார். தற்போது, நீதிமன்ற உத்தரவின்பேரிலேயே நீட் தேர்வு அனுமதிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு கூடாது என்பது அ.தி.மு.க.வின் நிலைப்பாடு.

இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு தி.மு.க. அரசு. கண்ணுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்தது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை சிறப்பான ஆட்சியை தமிழகத்தில் நடத்தி வருகிறது. பல்வேறு துறைகளில் விருதுகளை வாங்கியுள்ளது.

                                     

எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்கள் தெய்வமாக இருந்து எங்களை வழி நடத்துகின்றார்கள்.

ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய முன்வர வேண்டும். ஆட்சியை கவிழ்க்கவும் கட்சியை உடைக்க முயற்சி செய்வது தரமற்ற செயல்.

அதிமுக ஆட்சியின்போது குடிமராமத்துத் திட்டம் மூலம் ஏரி, குளம், குட்டைகளை தூர்வாரினோம். அதில் தண்ணீர் நிரப்பி வைத்துள்ளோம். அதன்மூலம் கடைக்கோடியில் உள்ள விவசாயிகளுக்கும் குறிப்பிட்ட காலத்தில் நடவு செய்யும் அளவிற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

                                

நிகழாண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகளிடமிருந்து கூடுதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை ஆண்டுதோறும் 27 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டில் 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கனவாக விளங்கிய மருத்துவக் கல்வியை 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு மூலமாக 435 ஏழை கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு மருத்துவக் கல்வி நனவாகியுள்ளது. இதற்கான கல்விக் கட்டணத்தையும் அரசே செலுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வருகிற ஆண்டில் தொடங்கப்பட உள்ள பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் 1,650 கூடுதல் இடங்களில் மேலும் உள் ஒதுக்கீட்டில் மாணவ, மாணவிகள் பயன் பெற வழிவகை ஏற்படும்.' இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்