'காரில் போடும் பம்பரால் வரும் பெரிய ஆபத்து'... 'பம்பர்களை அகற்றாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம்'... தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பொருத்திய பம்பர்களை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லாவிட்டால், ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கார் வாங்கும் பெரும்பாலானோர் கார் விபத்தில் சிக்கும்போது காருக்கு சேதாரம் ஏற்படுவதைத் தவிர்க்க, அல்லது நெரிசலான சாலைகளில் செல்லும்போது மற்ற வாகனங்களோ, இருசக்கர வாகனங்களோ உரசினால் காருக்கு சேதாரம் ஏற்படாமல் தவிர்க்க ‘கிராஷ் கார்டு' எனப்படும் பம்பரை பொருத்துகின்றனர். ஆனால் அதற்குப் பின்னால் இருக்கும் ஆபத்தை அவர்கள் உணராமல் பம்பரை பொருத்தி விடுகிறார்கள். அதாவது சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புக்கு 4 சக்கர வாகனங்களில் பொருத்தப்படும் பம்பர்களும் முக்கிய காரணமாக உள்ளது.

இதன்காரணமாக கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பம்பர்களை பொருத்தக் கூடாது என மத்திய அரசின் போக்குவரத்து அமைச்சகம் கடந்த 2017-ல் உத்தரவிட்டது. எனவே, விதிகளை மீறி பம்பர் பொருத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தமிழகம் முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள், வாகன ஆய்வாளர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நடவடிக்கைகள் தொடர்பாகப் பேசிய போக்குவரத்து ஆணையரக அதிகாரி ஒருவர், ''ஒவ்வொரு வகை வாகனமும் தயாரிக்கும் முன்பே, அவசியமான வடிவமைப்பு குறித்து ஆராய்ச்சி செய்த பிறகே, தயாரிக்கப்படுகின்றன.

ஆனால் அந்த வாகனத்தை வாங்கும் உரிமையாளர்கள் சிலர், வாகனங்களில் கூடுதலாக தங்களின் வசதிக்காக பம்பரை பொருத்துகின்றனர்.  இதற்குப் போக்குவரத்துத் துறை தடை விதித்துள்ளது. சாலை விபத்து ஏற்பட்டால், அவர்களின் உயிரிழப்பு ஏற்படுவதற்கு அந்த வாகனங்களில் பொருத்தியுள்ள பம்பரும் முக்கிய காரணமாகும். அதுமட்டுமல்லாமல் சாலையில் செல்லும் பாதசாரிகளுக்கும், இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கும் ஆபத்தாக ஏற்படுத்துகிறது.

இதன்காரணமாக வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பம்பர்களை உடனே அகற்ற வேண்டும். அகற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தமிழகம் முழுவதும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள், ஆய்வாளர்கள், போக்குவரத்து போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி சோதனையில் சிக்கும் வாகன உரிமையாளருக்குப் போக்குவரத்து சட்டத்தின்படி 6 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என, அந்த அதிகாரி கூறியுள்ளார்.

இதற்கிடையே பாதுகாப்பிற்காகத் தான் நாங்கள் பம்பரை பொருத்துகிறோம், அது எப்படி ஆபத்தாக இருக்கும் எனப் பலருக்கும் குழப்பம் ஏற்படலாம். ஆனால் காரில் பொருத்தப்படும் பம்பரால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து சென்னை ஐஐடி பேராசிரியர் ஒருவர் விளக்கமளித்துள்ளார். ''சாலைகளில் வாகனத்தில் பயணம் செய்யும்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டால், வாகனங்கள் சேதமடைந்தாலும், பயணிப்போரின் உயிரைக் காப்பாற்றும் வகையில் பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால் கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களின் முன்பகுதிகளில் பம்பர் பொருத்துவதால், வாகனங்கள் மோதும் அதேவேகத்தில் உள்ளே இருப்பவர்களுக்கும் பலத்த காயமோ, உயிரிழப்போ ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோன்று ‘ஏர்பேக்’ வசதியுள்ள வாகனங்கள் விபத்தில் சிக்கும்போது, ‘ஏர் பேக்' விரிவடைவதை பம்பர் தடுத்து விடுகிறது. இதைப் பலர் புரிந்து கொள்ளாமல் பம்பரை பொருத்தி விடுகிறார்கள்.

இதனால் வாகனத்தில் இருப்பவர்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும். காரின் முகப்பு, உயிரிழப்புகளைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது'' என விளக்கமளித்துள்ளார். இந்த விவகாரம் குறித்துப் பேசிய சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்க பொதுச்செயலாளர் ஜூட் மேத்யூ, ''நான்கு சக்கர வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள பம்பர்களை அகற்ற வேண்டும் எனப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

ஆனால் தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் வாகனங்களை பம்பர் இல்லாமல் பார்க்க முடியுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கேட்டுள்ள அவர், ஏர்பேக் இல்லாத வாகனங்களில் மேற்கொள்ளவுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு தெரிவிக்க வேண்டும், எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்