'கல்யாணத்தை 5 லட்சத்துல முடிப்போம் '... 'மிச்சம் இருந்த 38 லட்சம்'... 'இப்படியும் தம்பதி இருப்பாங்களா'... மொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உதவி செய்வதற்குப் பணம் ஒரு தடையில்லை, அதற்கான மனசு இருந்தால் போதும் என்ற கூற்று உண்டு. அதை மெய்ப்பிக்கும் வகையில் நடந்துள்ளது இந்த சம்பவம்.

திருப்பூரை சேர்ந்த அருள்செல்வம் என்பவரின் மகன் அருள் பிரனேஷ். இவருக்கும் திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் கவுரிசங்கர் என்பவரின் மகள் அனு என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, காங்கயம்-வட்டமலை அங்காளம்மன் கோவிலில் கொரோனா விழிப்புணர்வு விதிமுறைகளுக்கு உட்பட்டு எளிமையாகத் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் திருப்பூர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள ரோட்டரி கொரோனா கேர் சென்டருக்கு ரூ.5 லட்சம், பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கொரோனா மையத்திற்கு ரூ.11 லட்சம், புஞ்சை புளியம்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கட்டமைக்கப்படும் முதியோர் இல்லத்திற்கு ரூ.2 லட்சம் வழங்கினர்.

மேலும் திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கம் சார்பில் பல்லடம் அரசு மருத்துவமனை சிகிச்சை மையத்தில்  ஐ.சி.யு., யூனிட் அமைக்க ரூ.7.66 லட்சம், மருத்துவ செலவினங்களை எதிர்கொள்ள முடியாமல் தத்தளிக்கும் 8 குடும்பங்களுக்கு ரூ.7லட்சம் என மொத்தம் ரூ.37.66 லட்சத்தை வழங்கினர்.

இதுகுறித்து மணமகனின் தந்தை அருள்செல்வம் கூறுகையில், ” இரண்டு நாட்களுக்கு முன்பு எனது இளைய மகனுக்குத் திருமணம் நடைபெற்றது. எளிமையாகத் திருமணம் நடந்ததால், திருமணச் செலவிற்காக ஒதுக்கிய 50 இலட்ச ரூபாயில் மீதமான பணத்தை ரோட்டரி மூலம் பல நலத்திட்டங்களுக்கு வழங்கியுள்ளோம். 50 இலட்ச ரூபாய்க்கு நலத்திட்டங்களை வழங்க உள்ளோம். மீதமுள்ள பணத்தையும் விரைவில் வழங்குவோம். இவ்வாறு உதவிகள் செய்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.

இதனிடையே மணமகன் அருள் பிரனேஷ் கூறுகையில், ”50 இலட்ச ரூபாய் திருமணம் செய்யத் திட்டமிட்டு இருந்தோம். 5 இலட்ச ரூபாய் செலவில் எளிமையாகத் திருமணம் செய்தோம். ரோட்டரி மூலம் 38 இலட்ச ரூபாய்க்கு உதவிகளை வழங்கியுள்ளோம். மீதி பணத்தையும் விரைவில் நலத்திட்டங்களுக்கு வழங்குவோம். கோவிட் காலத்தில் கல்யாணம் செய்பவர்கள் இதுபோல இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு  உதவினால் பயனுள்ளதாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

எளிமையாகத் திருமணத்தை நடத்தி, திருமண செலவுக்காக வைத்திருந்த பணத்தில் பல உதவிகளைச் செய்துள்ள இந்த தம்பதியரின் செயல் பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்