‘பல வருஷ பகை’.. ‘விளையாட்டுப் போட்டியில் மோதல்’.. டீக்கடையில் நின்ற இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இரு ஊர் பகை காரணமாக மாட்டுப்பொங்கல் அன்று இளைஞர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் மற்றும் பூலம் ஆகிய இரு கிராமங்களுக்கு இடையே பல வருடங்களாக பகை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் இரு கிராம மக்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை மாட்டுப் பொங்கலையொட்டி சிங்கிகுளம் கிராமத்தில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் பூலம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

அப்போது வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பது தொடர்பாக இரு கிராமங்களை சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பைச் சேர்ந்த பெரியவர்களின் முயற்சியால் அனைவரும் கலைந்து சென்றுள்ளனர். இரு கிராமங்களும் அருகருகே இருப்பதால் பூலம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (23) என்ற இளைஞர் சிங்கிகுளத்தில் உள்ள டீக்கடையில் நின்று நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

அந்த சமயம் அங்கே வந்த சிங்கிகுளம் இளைஞர்கள் சிலர், சுரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவலை அறிந்த பூலம் கிராமத்து இளைஞர்கள், கைகளில் பயங்கர ஆயுதங்களுடன் சிங்கிகுளம் கிராமத்துக்குள் சென்று வீடுகளை அடித்து நொறுக்கி சூரையாடியுள்ளனர். மேலும் நான்கு வீடுகளுக்கு தீவைத்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சுரேஷின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு நிலைமையை கட்டுக்கொண்டு வந்துள்ளனர். இதனை அடுத்து தனிப்படை அமைத்து கொலை செய்தவர்களை தேடி வருகின்றனர். இரு கிராம பகையால் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TIRUNELVELI, MURDER, POLICE, MATTUPONGAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்