'கருப்பு மை இருக்குற நோட்டு தான் கருப்பு பணம்...' 'வெரி சிம்பிள் இத ஈசியா வெளுப்பாக்கிடலாம்...' 'இப்படியெல்லாமா ஏமாத்துவாங்க...' - நூதன மோசடி...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்துள்ள கொட்டகுளத்தை சேர்ந்தவரான விஜி, பைக் பழுதுபார்க்கும் வொர்க்‌ஷாப் வைத்திருக்கிறார். அம்மாபேட்டையைச் சேர்ந்த பழநி என்பவர் தனது பைக்கை பழுது பார்ப்பதற்காக விஜியின் வொர்க்‌ஷாப்புக்கு வந்துள்ளார்.

அப்படி வந்த பழக்கத்தில் சில தினங்களிலேயே இருவரும் நெருங்கிய நண்பர்களாக ஆகியுள்ளனர். தனது குடும்பச் செலவுக்காக விஜி பலரிடம் இருந்தும் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியிருக்கிறார். அதனால் கடன் கொடுத்தவர்கள் அதைத் திருப்பிக் கேட்டு அடிக்கடி அவரது பைக் வொர்க்‌ஷாப்புக்கு வந்து கேட்டுள்ளார்கள்.

இதைக்கண்ட அவரது நண்பரான பழநி, சென்னையில் தனக்கு தெரிந்த பணக்கார நண்பரிடம் லட்சக்கணக்கில் கறுப்புப் பணம் இருப்பதாகவும், ஒரு லட்சம் கொடுத்தால் இரண்டு லட்சம் கறுப்புப் பணம் கொடுப்பார் என்றும் கூறியிருக்கிறார்.

ஆரம்பத்தில் எதற்கு இந்த தேவையில்லாத வேலை என்று மறுத்திருக்கிறார் விஜி. அப்போது தனது சட்டை பாக்கெட்டில் இருந்த கறுப்பு மை தடவியிருந்த 500 ரூபாய் நோட்டைக் காட்டிய பழநி, அதன்மீது ஒரு ரசாயனத்தை ஊற்றி அவர் கண் முன்னால் தடவியிருக்கிறார். அப்போது அந்த கறுப்பு மை மறைந்து சாதாரண ரூபாய் நோட்டாக மாறியுள்ளது. இதைக் கண்டபோது விஜிக்கு ஆசை ஏற்பட்டது.

ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால், இரண்டு லட்சம் கிடைக்கும் என்றும் இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்தால், நான்கு லட்சம் கிடைக்கும் என்றும் கூறிய பழநி, தேவைப்படும்போது கறுப்பு மையை அழித்துவிட்டுச் செலவு செய்துகொள்வதுடன், கடனையும் அடைத்துவிட்டு லட்சாதிபதி ஆகிவிடலாம் என்று கூறியிருக்கிறார். மேலும் பழநியுடன் வந்த கணத்தம்பூண்டியைச் சேர்ந்த பிராங்க்ளின் என்பவர், தங்களிடம் நிறைய கறுப்பு பணம் இருப்பதால், இப்படி நிறைய பேருக்கு உதவி செய்துவருகிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால் தற்போது பணம் இல்லை என்று கூறியுள்ளார் விஜி, வீட்டிலிருக்கும் நகைகளை அடகு வைக்கலாம் என்று பழனியும், பிரங்க்ளினும் ஆசைக்காட்டி தூண்டி விட்டுள்ளனர்.

ஆசையில் விஜி அதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். வங்கியில் ஏற்கெனவே குறைந்த தொகைக்கு அடகு வைத்திருந்த தனது மனைவியின் தங்க நகையை மீட்டு, அடகுக்கடையில் வைத்து பழநியிடம் ரூ.75,000 ஆயிரம் கொடுத்திருக்கிறார்.

அதை வாங்கிக்கொண்டு அதற்கு பதிலாக கறுப்பு மை தடவப்பட்ட கரன்சிக் கட்டுகள் அடங்கிய ஒரு பார்சலை கொடுத்தார் பழநி. நோட்டுகளைச் சோதனை செய்து பார்க்கும்படி கூறியிருக்கிறார். அவர் கொடுத்த ரசாயனத்தை ஒரு நோட்டில் தடவியபோது கறுப்பு மை மறைந்ததும் திருப்தியடைந்த விஜி, பார்சலை வீட்டுக்கு எடுத்துச் சென்று கறுப்பு மையை நீக்க முயன்றிருக்கிறார்.

முதலில் ஒன்றிரண்டு நோட்டுகள் மட்டும் கரன்சியாக வர, மற்ற அனைத்தும் வெள்ளைத் தாள்களாக இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்த விஜி, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கலங்கி போயுள்ளார்.

உடனடியாக பழநியிடம் சென்ற அவர், பணத்தை திருப்பித் தரவில்லையென்றால் போலீசில் புகார் அளிப்பேன் என்று கூறியதால், ரூ.10,000 கொடுத்ததுடன் மீதித் தொகையை பிறகு தருவதாக கூறியுள்ளார். ஆனால் பணத்தை திருப்பி தராத காரணத்தால் மேல்செங்கம் போலீசாரிடம் புகார் அளித்திருக்கிறார் விஜி. இந்த புகாரின் பேரில் பிராங்க்ளினை பிடித்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பழநியை போலீசார் தீவிரமாக வலை வீசி தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்