ஆட்டோவில் இருந்து வந்த... இளம்பெண்ணின் அலறல் சத்தம்... காப்பாற்றப்போய் டிரைவரால்... இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்ட இளம் பெண்ணை காப்பாற்ற முயன்ற 5 இளைஞர்களில் ஒருவர், ஆட்டோ மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு பகுதியில் உள்ள காவல் நிலையம் அருகே கூட்டு ரோட்டில், மாலை 6 மணியளவில் மாரிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பவானி என்ற இளம் பெண் நரசிங்கபுரம் செல்வதற்காக, காத்து கொண்டிருந்தார். அப்போது, அப்போது அங்கு வந்த ஆட்டோவில் அவர் ஏறியுள்ளார். அந்த ஆட்டோவில்,  மேலும் சில பயணிகளும் இருந்துள்ளனர். போகும் வழியில் மற்ற பயணிகள் இறங்கி விட்ட நிலையில் பவானி மட்டும் ஆட்டோவில் இருந்துள்ளார். அப்போது, ஆட்டோ நரசிங்கபுரம் செல்லாமல் கொண்டஞ்சேரி பகுதியில் இருந்து கடம்பத்தூர் செல்லும் சாலையில் வேகமாக சென்றுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பவானி ஆட்டோவை நிறுத்துமாறு கூறியுள்ளார். ஆனால் ஆட்டோ ஓட்டுநரோ வண்டியை நிறுத்தாமல் இன்னும் வேகமாக சென்றுள்ளார். இதனால் பதறிப்போன அந்தப் பெண், ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனைப் பார்த்து அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற கொண்டஞ்சேரி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் யாகேஷ், பிரேம்குமார், வினித், பிராங்கிளின் மற்றும் சார்லி ஆகிய 5 இளைஞர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, 2 பைக்குகளில் அந்த இளைஞர்கள் ஆட்டோவை பின் தொடர்ந்து விரட்டிச்சென்றனர். அப்போது, ஆட்டோவிலிருந்து பவானி கீழே குதித்தார். அதில் அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இருப்பினும் ஆட்டோ நிற்காமல் சென்றதால், அதனை மடக்கிப் பிடிப்பதற்காக இளைஞர்கள் தொடர்ந்து வெகுதூரம் வரை ஆட்டோவை விரட்டிச் சென்றுள்ளனர். சத்திரம் தரைப்பாலம் அருகே ஆட்டோவை வழிமறித்து நிறுத்த முயன்றபோது, ஆத்திரம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர், இளைஞர்கள் வந்த பைக்கை இடித்து தள்ளிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

ஆட்டோ இடித்ததில், இளைஞர்கள் கீழே விழுந்தனர். இதில் யோகேஷ் (22) என்ற இளைஞர் படுகாயமடைந்தார். நண்பர்கள் அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக, மருத்துவர்கள் அவரை சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி, யோகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அவரது நண்பர்கள் கதறித்துடித்தனர். மற்ற இளைஞர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மப்பேடு காவல்நிலைய போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.

அதில் பிஞ்சிவாக்கத்தைச் சேர்ந்த கேசவன் என்ற ஆட்டோ ஓட்டுநர், கடத்தல் முயற்சியில் ஈடுபட்டதும், யோகேஷை இடித்து தள்ளி கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். மேலும் வழியில் காத்துக்கொண்டிருந்த இளம்பெண்ணை எதற்காக கடத்த முயன்றார் என்றும், அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

THIRUVALLUR, WOMAN, MAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்