'நீங்க தைரியமா இருங்க, நான் பார்டர் போக போறேன்...' 'அங்க சிக்னல் கெடைக்காது...' மனைவியிடம் கடைசியாக செல்போனில் பேசிய ராணுவ வீரர் பழனி...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

லடாக் பகுதியில் இந்திய - சீனா ராணுவத்திற்கு நடந்த மோதலில் தமிழகத்தை சேர்ந்த ஹவில்தார் பழனி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின்  ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஹவில்தார் பழனி என்பவர் சிறுவயதில் இருந்தே விளையாட்டுகளில் அதிக ஈர்ப்பு உள்ளவராக இருந்துள்ளார். மேலும் குடும்ப வறுமை காரணமாக தன்னுடைய 19 வயதில் இந்திய ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்காகவும், தன் குடும்பத்திற்காகவும் தன்னை அர்ப்பணித்துள்ளார்.

தன்னுடைய 22 ஆண்டுகளாக பணியாற்றி விட்டதால், இன்னும் ஓராண்டில் ராணுவ பணியை நிறைவு செய்து விட்டு, சொந்த ஊர் வர திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் பழனியின் இழப்பு அவரது குடும்பத்திற்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பழனி(40)அவர்களுக்கு வானதிதேவி என்ற மனைவி, மகன் பிரசன்னா (10), மகள் திவ்யா (8) உள்ளனர். எல்லைக்கு செல்லும் முன் கடந்த 13-ம் தேதி கிரஹப்பிரவேசத்தின் போது செல்போனில் தன் கணவர் கடைசியாக பேசியதை குறித்து கூறிய வானதி, 'நான் எல்லைக்கு போக போறேன். அங்க போன போன்லாம் பண்ண முடியாது சிக்னல் கிடைக்காது. நீங்க எல்லாரும் தைரியமாக இருங்க, பயப்படக்கூடாது என கூறியதாக வானதி தெரிவித்தார்.

மேலும் பழனி அவர்களின் தந்தையும், என் மகன் விருப்பப்படி தான் ராணுவத்துக்கு போனான். நாட்டுக்காக உயிர் போனது ஒரு வகையில பெருமையா தான் இருக்கு. ஆனா வாழவேண்டிய வயசுல என் மருமகள், பேர குழந்தைகளை விட்டுட்டு போய்ட்டான்' என மனம் உடைந்து கூறினார்.

மேலும் பழனி அவர்களின் தம்பியும் தற்போது ராணுவத்தில் தான் சேவையாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது. 1999ல்  இருந்து நாட்டுக்காக பணியாற்றிய பழனி அவர்களின் குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி அவரின் மகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். நாட்டிற்காக உயிர் நீத்த அவரின் சேவையை பாராட்டி மத்திய, மாநில அரசுகள் அவரின் வீரமரணத்தை கவுரவிக்க வேண்டும் என பழனி அவர்களின் மாமனார் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டுக்காக எல்லையில் உயிர்நீத்த பழனி அவர்களின்  உடல் சென்னை கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து   மதுரை விமான நிலையங்கள் கொண்டுவரப்பட்டு பின் ராணுவ வாகனம் மூலமாக ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்