'அவங்க மட்டும் இல்லன்னா, நானும் என் குழந்தைங்களும்...' 'என் உயிர் இருக்கிற வரைக்கும் மறக்க மாட்டேன்...' தாயாக மாறிய இன்ஸ்பெக்டர்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

குடும்ப பிரச்சனையால் தற்கொலைக்கு முயன்ற பெண்ணின் வாழ்க்கையை மாற்றி, அவரது மகளுக்கு சீர்வரிசையுடன் கல்யாணம் செய்து வைத்த போலீசாரின் செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு (2017) சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் தன் 3 குழந்தைகளோடு தானும் தற்கொலை செய்து கொள்ள போவதாக சொன்னவர் தான் ஜோதி லட்சுமி. தன் கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தற்கொலை முடிவுக்கு வந்த ஜோதி லட்சுமியின் புகாரின் அடிப்படையில் அவரது கணவர் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் பின்னர் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியைத் தனியாகச் சந்தித்து தனது மனக்குறைகளை கூறியுள்ளார் ஜோதி.

அவரது கஷ்டங்களை கேட்ட இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தற்கொலை எண்ணம் கோழைத்தனமான செயல் என்று கூறி, ஜோதிலட்சுமி மற்றும் அவரது 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் மகனுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக கூறி ஆறுதல் படுத்தியுள்ளார். சொல்வதோடு மட்டும் இல்லாமல் ஜோதியின் குடும்பத்தை ஒரு பாதுகாப்பான இடத்தில் குடியேற்றி, 3 குழந்தைகளுடைய படிப்புக்கு தேவையான அனைத்து செலவுகளையும் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியே செய்துயுள்ளார். ஜோதி லட்சுமிக்கு ஒரு வேலையும் வாங்கி கொடுத்து உள்ளார்.

ஜோதி லட்சுமியின் முதல் மகளுக்கு திருமண வயது வரவே வரம் பார்க்கும் படலம் தொடங்கியுள்ளது. இவர்களது குடும்ப சூழல் அறிந்த மணமகன் சீதனம் எதுவும் வாங்காமல் கல்யாணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்த விஷயத்தை இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியிடம் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் ஜோதி லட்சுமி. பிரியதர்ஷினி உனக்கு மட்டும் இல்லை எனக்கும் மகள் தான் என்று கூறி திருமண ஏற்பாடுகளை செய்யுமாறு கூறியுள்ளார் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி.

திருமணத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் தன் சொந்த செலவிலேயே வாங்கி கொடுத்துள்ளார் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி. அவர் மட்டும் இல்லாமல் தலைமைச் செயலக காவல் நிலையத்தில் பணிபுரியும் எஸ்.ஐ மீனா, தலைமைக் காவலர் ஜான் மற்றும் வாசுதேவன், கணபதி அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளை பிரியதர்ஷிணியின் திருமணத்துக்குச் செய்தனர். கட்டில், பீரோ, மெத்தை, ஆறு கிராம் தங்க கம்மல், பாத்திரங்கள், 10,000 ரூபாய் ஆகியவற்றை தலைமைச் செயலக காலனி போலீஸ் நிலையம் சார்பில் பிரியதர்ஷிணிக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.

இதற்கு நன்றி செலுத்தும் விதமாக திருமண நாளுக்கு முந்திய இரவு ஓட்டேரியைச் சேர்ந்த பலர் காவல் நிலையத்துக்கு வந்தனர். அவர்களோடு பிரியதர்ஷிணியும் அவரின் அம்மாவும் வந்து இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் அங்கு பணிபுரியும் அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கும் மனமார நன்றி தெரிவித்து உள்ளனர். ஓட்டேரி பகுதி மக்கள் மற்றும் போலிசார் அனைவரும் சேர்ந்து காவல் நிலையத்திலேயே பிரியதர்ஷினிக்கு விழா எடுத்துவிட்டார்கள்.அடுத்த நாள் சென்னை அயனாவரத்தில் நேற்று மார்ச் 5ஆம் தேதி கோலாகலமாக பிரியதர்ஷிணிக்கு திருமணம் நடைபெற்றது.

பிரியதர்ஷினிக்கு இன்ஸ்பெக்டரும் தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒவ்வொருவரும் தாயாகவும் தகப்பனாகவும் இருந்து இந்த உதவியைச் செய்துள்ளனர் என்றும், அவர்களை உயிர் உள்ளவரை மறக்க மாட்டேன் என்றும் கண்கலங்க கூறியுள்ளார் ஜோதி லட்சுமி.

பிரியதர்ஷினி திருமணம் ஜோதி லட்சுமிக்கு மட்டும் அல்லாமல் ஓட்டேரி பகுதி மக்கள் மற்றும் தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீசாருக்கும் மனம் நிறைந்த ஒரு கொண்டாட்ட நிகழ்வாக அமைந்தது.

POLICE, MARRIAGE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்