கஷ்டப்பட்டு சம்பாதித்த 'பணம்' எப்போதும் வீண் போகாது... வறுமையிலும் ஆட்டோக்காரரின் நேர்மை...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவை, திருச்சி சாலை சுந்தரேச ஐயர் லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் காயத்திரி. இவர் தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் அலுவலராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், பிரபல தங்க நகைக்கடை ஒன்றில் நகை சேமிப்பு திட்டத்தில் தவணை முறையில் பணம் கட்டி வந்துள்ளார். தவணை முடிந்த நிலையில், நேற்று 38.896 கிராம் எடையுள்ள ரூ.2,43,617 மதிப்புள்ள தங்க நகையை வாங்கியுள்ளார். இதையடுத்து, பெங்களூர் செல்வதற்காக தனது அம்மாவுடன், இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது, நகை வாங்கிய பையை செஞ்சிலுவை சங்கம் முன்பு தவறவிட்டுள்ளார்.

சாய்பாபா காலனி பகுதியைச்சேர்ந்தவர் கோபு (37). தனியார் ஜவுளி நிறுவனத்தில் முழு நேர ஓட்டுநராகப் பணிபுரிந்து வரும் கோபு, பகுதி நேரமாக ஓலா ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு செஞ்சிலுவை சங்கம் அருகே வரும்போது, சாலையில் கிடந்த தங்க நகை பை கோபுவின் கண்ணில் பட்டுள்ளது.

இதையடுத்து, அந்தப் பையை எடுத்து பந்தய சாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். தங்க நகை வாங்கிய பையில் இருந்த ரசீதில் காயத்திரியின் முகவரி மற்றும் செல்போன் எண் இருந்துள்ளது.

அதன் மூலம், காவல் துறையினர் கொடுத்த தகவலின் அடிப்படையில், இன்று காவல்துறை ஆணையரிடமிருந்து தங்க நகையை காயத்திரி குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். வறுமையான சூழ்நிலையில் இருந்தாலும், கோபுவின் இந்த நேர்மையைப் பாராட்டி கோவை மாநகர காவல்துறை ஆணையர் சுமித் சரண் மற்றும் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பாலாஜி சரவணன் ஆகியோர் பரிசு வழங்கினர்.

இதுகுறித்து கோபு, `சவாரி ஏற்றிக்கொண்டு வரும்போது, எதேச்சையாக அந்தப் பை கண்ணில் பட்டது. நம்மைப் போலத்தானே, அடுத்தவர்களும் கஷ்டப்பட்டு தங்கம் வாங்கியிருப்பார்கள். இது காணாமல் போனால், அவர்கள் எந்த அளவுக்கு கஷ்டப்படுவார்கள் என்று தெரியும், ரசீதில் இருந்த நம்பர் மூலம் அவர்களுக்குத் தகவல் கொடுத்துவிட்டு, பையைக் காவல்துறையில் ஒப்படைத்துவிட்டேன்.

இதில், வேறு எந்த நினைப்பும் எனக்கு வராது. மற்றவர்களுக்கும் அது வரக் கூடாது. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் எப்போதும் வீண் போகாது. எந்தச் சூழ்நிலையிலும் நேர்மையை மட்டும் விட்டு விடக்கூடாது” என்றார்.

HONEST, GOLD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்