'Home லோன் EMI போயிட்டு இருக்கா? '...'இனிமேல் இந்த 7 வங்கிகளின் காசோலை செல்லாது'... வெளியான விரிவான தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஏப்ரல் 1-ம் தேதி முதல் 7 பொதுத்துறை வங்கிகளின் காசோலை செல்லாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விஜயா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி, சிண்டிகேட் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, அலகாபாத் வங்கி மற்றும் தேனா வங்கி ஆகிய பொதுத்துறை வங்கிகள் இதர முக்கியமான பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கப்பட்டன. இதனால் மேற்குறிப்பிட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறிது அசவுகரியம் ஏற்பட வாய்ப்புள்ளது.

குறிப்பாக ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய இரு வங்கிகள் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்பட்டிருக்கிறன. அதனால், மேலே குறிப்பிட்ட இரு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் இனி பஞ்சாப் நேஷனல் வங்கியின் காசோலை மற்றும் கணக்கு புத்தகத்தை தான் பயன்படுத்த முடியும்.

தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி உள்ளிட்ட இரு வங்கிகளும் பேங்க் ஆப் பரோடா வங்கியுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. எனவே இந்த இரு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் பேங்க் ஆஃப் பரோடா காசோலை புத்தகத்தை பயன்படுத்த வேண்டும். அதேபோல கார்ப்பரேஷன் வங்கி மற்றும் ஆந்திரா வங்கி ஆகிய இரு வங்கிகள், யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன.

இனி இந்த இரு வங்கிகளின் வாடிக்கையாளர்கள் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் காசோலையை பயன்படுத்த வேண்டி இருக்கும். இதற்கிடையே சிண்டிகேட் வங்கி மற்றொரு பொதுத்துறை வங்கியான கனரா வங்கியுடன் இணைக்கப்பட்டது. இந்த இணைப்பு கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இருப்பினும் சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு கனரா வங்கி சிறிதளவு கால அவகாசம் வழங்கி இருக்கிறது.

வரும் ஜூன் மாதம் 30-ம் தேதி வரை சிண்டிகேட் வங்கியின் கணக்கு புத்தகம் மற்றும் காசோலை செல்லும் என கனரா வங்கி அறிவித்திருக்கிறது. அதேநேரத்தில் சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டாலும் தற்போதே புதிய காசோலைக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் வங்கி பரிவர்த்தனையில் எந்த பிரச்சனையும் எழாது. சில வங்கிகள் வங்கி கணக்கு எண்ணை மாற்றவில்லை. ஆனால், இதர ஐஎப்எஸ்சி கோடு, எம்ஐசிஆர் கோடு, வங்கி முகவரி உள்ளிட்டவற்றில் மாற்றம் இருக்கும்.

அதேபோல உங்களது கணக்கில் உங்களது முகவரி, மெயில் ஐடி மொபைல் எண் உள்ளிட்டவை சரியாக பொருந்தி இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டியது அவசியம். இவை சரியாக இருந்தால் மட்டுமே ஒன் டைம் பாஸ்வோர்ட் நமக்கு கிடைக்கும். மேலும் முக்கியமாக பலருக்கும் வீட்டுக்கடன் உள்ளிட்ட இதர கடன்களுக்கான மாத தவணை, காப்பீடு பிரீமியம் உள்ளிட்ட அனைத்து முதலீட்டு திட்டங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் வங்கி எண்களில் சிக்கல் உருவாகலாம்.

எனவே வாடிக்கையாளர்கள் புதிய வங்கி மற்றும் கணக்கு எண் சரியாக மாற்றப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதற்கிடையே பழைய ஏடிஎம் கார்டுகளை எக்ஸ்பையரி காலம் வரை பயன்படுத்துவதற்கு சில வங்கிகள் அனுமதிக்கின்றன. அதேநேரத்தில் இணையதள பரிவர்த்தனைக்கும் பழைய வங்கியின் இணையதளம் மற்றும் செயலியை பயன்படுத்த முடியாது.

இந்த மாற்றங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய கணக்கு தொடங்குவது போன்ற உணர்வை கொடுக்கலாம். ஆனால் வாடிக்கையாளர்கள் சிரமம் பார்க்காமல் இந்த மாற்றங்களை முதலே செய்து விட்டால் தேவைப்படும் நேரத்தில் எளிதாக வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். எனவே வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனே சம்மந்தப்பட்ட வங்கியை அணுகுவது நல்லது.

மற்ற செய்திகள்