‘366 கிலோ மீட்டர், 6 மாவட்டங்கள்’.. 4 மணிநேரத்தில் கடந்து சிறுவன் உயிரை காத்த ஆம்புலன்ஸ் டிரைவர்..! குவியும் பாராட்டுக்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

4 மணி நேரத்தில் 366 கிலோமீட்டர் பயணம் செய்து சிறுவனின் உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அழகன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் நயினார் முகமது. இவரது மகன் முகமது அமீருல் (13). இவருக்கு முதுகு தண்டுவடத்தில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்ததால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிறுவனின் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாததால் மருத்துவமனை நிர்வாகம் அவரை வீட்டுக்கு அனுப்பியுள்ளது. இதனை அடுத்து அமீருல்லின் பெற்றோர் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு அமீருல்லை சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கவில்லை என்றால் முதுகு தண்டுவடம் முழுவதும் செயலிழந்துவிட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் 6 மணி நேரத்துக்குள் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அறிவுறுத்தியுள்ளனர். 366 கிலோமீட்டர் தூரத்தை எப்படி 6 மணிநேரத்தில் கடக்க முடியும் என அமீருல்லின் பெற்றோர் தவித்துள்ளனர்.

அப்போது தமுமுக ஆம்புலன்ஸ் உதவ முன்வந்துள்ளது. இதனை அடுத்து இராமநாதபுரத்தில் இருந்து புதுச்சேரிக்கு இடையில் இருக்கும் அனைத்து தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சமூக வலைதளங்களிலும் இதுகுறித்து பதிவிட்டுள்ளனர். இதனை அடுத்து அனைத்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும் அந்தந்தப் பகுதியில் உள்ள காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக காவல் துறையினரும் இதில் களமிறங்கியுள்ளனர். சரியாக மாலை 6:20 மணிக்கு சிறுவனை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு ஓட்டுநர் முகமது இஜாஸ் புறப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து ஆம்புலன்ஸ் கடக்கும் ஒவ்வொரு இடத்தையும் வாட்ஸ் ஆப் மூலம் அனைத்து ஊர்களில் இருக்கும் தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனைக்கொண்டு காவல் துறையினரின் உதவியுடன் ஆம்புலன்ஸ் வரும் வழியில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். இதன்மூலம் இராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களை கடந்து இரவு 10:15 மணிக்கு ஜிப்மர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். துரிதமாக செயல்பட்டு சிறுவனை உயிரை காத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் காவல் துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

HOSPITAL, AMBULANCE, DRIVER, RAMANATHAPURAM, JIPMER, BOY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்