159 வருடங்களில் முதல்முறை... வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் 'சாத்தான்குளம்' காவல் நிலையம்... காரணம் என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் இந்தியா முழுவதும் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் இந்த விவகாரத்தில் உண்மை நிலைநாட்டப்பட வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது சாத்தான்குளம் காவல் நிலையம் முழுவதும் வருவாய் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கோவில்பட்டி மாஜிஸ்திரேட் நடத்திய விசாரணைக்கு போலீசார் ஒத்துழைக்கவில்லை. இதையறிந்த நீதிபதிகள்  சாத்தான்குளம் காவல்நிலையத்தின் ஆவணங்கள், தடயங்களைப் பாதுகாத்திடும் வகையில் வருவாய்த்துறை அதிகாரியை நியமிக்க உத்தரவிட்டனர்.

நீதிமன்ற உத்தரவுப்படி சமூகப் பாதுகாப்புத்துறை தனி தாசில்தார் செந்தூர்ராஜனின் கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல்நிலையம் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது நீதித்துறை உத்தரவுப்படி தாசில்தார் கட்டுப்பாட்டில் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இது குறித்து ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான டாக்டர் என்.சி. அஸ்தானா, ''1861-ல் இந்திய போலீஸ் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு காவல்நிலையத்தை வருவாய்த்துறை தன் கட்டுப்பாட்டில் எடுத்திருக்கிறது.

காவல்துறையின் உயர் அதிகாரிகள் மீது நம்பிக்கை இல்லாததின் காரணமாகவே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இது காவல்துறைக்கு பெரும் அவமானமான சம்பவம்,'' எனத் தன்னுடைய ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தி வரும் நிலையில் தடயங்களை யாரும் அழித்து விடக்கூடாது என்பதற்காக இந்த உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்