'சொந்தக்காரங்க ஒருத்தர் கூட எட்டி பாத்தது இல்ல'... 'இப்போ என்னா பாசம்'... வாழ்க்கையையே புரட்டி போட்ட 'விற்காத லாட்டரி'... தென்காசிகாரருக்கு அடித்த பம்பர் தொகை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வாழ்க்கை எந்த நேரத்திலும் யாருக்கு வேண்டுமானாலும் எப்படியும் மாறலாம் என்பதற்கு உதாரணமாக மாறியுள்ளார் இந்த தென்காசிகாரர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டைக்கு அருகே புளியறை செல்லும் வழியில் உள்ளது இரவியதர்மபுரம். இந்த ஊரைச் சேர்ந்தவர் சுரஃபுதீன். தற்போது திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட பகுதி மக்களிடையே இவரைப் பற்றிய பேச்சு தான் அதிகமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் லாட்டரி சீட்டு மூலம் 12 கோடிக்கு அதிபதியாகியிருப்பதுதான். ஆனால் அது எளிதாக நடக்கவில்லை. அதில் பெரிய சுவாரஸ்யமே அடங்கியுள்ளது.

கேரளாவில் லாட்டரி சீட்டு அரசின் அனுமதியோடு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கேரளா சம்மர் பம்பர் லாட்டரி இந்த ஆண்டு கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த ஜனவரி 17ஆம் தேதியன்று திருவனந்தபுரத்தின் மேயர் ஆர்யா ராஜேந்திரன் தலைமையில் இந்த லாட்டரிக்கான குலுக்கல் நடைபெற்றது. இந்த குலுக்கலில் XG 358753 என்ற எண் கொண்ட டிக்கெட்டுக்கு முதல் பரிசாக 12 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டது.

முதல் பரிசு என்பதால் அந்த தொகை யாருக்கு விழுந்திருக்குமோ என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்தப் பரிசை வென்ற நபர் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சுரஃபுதீன் என்ற தகவல் வெளியானது. அவர் எங்கு லாட்டரி சீட்டினை வாங்கினார் என்பது குறித்துத் தெரிந்து கொள்ளப் பலரும் ஆர்வமாக இருந்தனர். இந்நிலையில் தனக்குப் பரிசு விழுந்தது குறித்து சுரஃபுதீன் பிபிசி செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்துள்ளார்.

அதில், ''நாங்கள் அண்ணன் தம்பி மூன்று பேர். எங்களுக்கு அப்பா இல்லாத காரணத்தினால் சிறு வயதிலேயே வீட்டோட கஷ்டத்தை புரிந்துகொண்டு வெளிநாட்டுக்குப் போயி வேலை பார்த்தேன். 9 வருஷமா அந்த பாலைவனத்தில் கஷ்டப்பட்டதுக்கு ஒரு பலனும் கிடைக்கவில்லை. வேறு வழி இல்லாமல் ஊருக்கு வந்த நான் லாட்டரி கடை போட முடிவு செய்தேன். ஆனால் தமிழ்நாட்டில் அதற்குத் தடை என்பதால் பைக்கில் சென்று கேரளாவில் விற்று விட்டு வருவேன்.

என்கிட்ட சீட்டு வாங்கினவர்கள் நிறையப் பேருக்குப் பரிசு விழுந்துருக்கு. அப்போதெல்லாம் அவ்வளவு சந்தோஷமா இருக்கும். இந்த சூழ்நிலையில் கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி வியாபாரம் நடைபெற்றதது. அதில் விற்காமலிருந்த மீதி லாட்டரியை கடையில் வைத்திருந்தேன். அதில் விக்காத சீட்டுக்கு 12 கோடி லாட்டரி விழுந்ததா அறிவித்தார்கள். எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. அழுவதா சிரிப்பதா என்று கூட தெரியாமல் நின்று கொண்டிருந்தேன்.

அப்பா இல்லாத எங்களைச் சொந்தக்காரர்கள் இதுவரை வந்து பார்த்தது கூட இல்லை. ஆனால் இப்போது பரிசு விழுந்ததைப் பார்த்து விட்டு பலரும் எங்கள் வீட்டிற்கு நலம் விசாரிக்க வருகிறார்கள். அவர்களைப் பார்க்கும் போது கொஞ்சம் பயமாக தான் இருக்கிறது. பரிசு பணத்தில் முதலில் மூத்த அண்ணனின் மகள் திருமணத்திற்கு வாங்கிய கடனை அடைக்க வேண்டும்.

அதன்பின்னர் எங்கள் வீட்டைச் சரி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ள சுரஃபுதீன்னின் வீட்டிற்குத் தினமும் பல வங்கி அதிகாரிகள் வந்து செல்கிறார்கள். இந்த நேரத்தில் எங்கள் அப்பா இல்லையே என்பது தான் எங்கள் பெரிய குறையாக உள்ளது. கடைசி வரை எங்கள் அம்மாவை நல்லா பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான் எங்கள் முதல் இலக்கு என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் சுரஃபுதீன்.

இதற்கு மேல் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்துள்ளதா கூறியுள்ள சுரஃபுதீன், தாங்கள் எப்போதும் போலத் தான் இருக்கப் போவதாகக் கூறியுள்ளார்கள். இதனிடையே சுரஃபுதீனும் அவரது மனைவியும் தற்போது பிரிந்து வாழ்கின்றனர். இந்தத் தம்பதிக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் வயதில் ஒரு மகன் இருக்கிறார். தனக்காக இல்லாவிட்டாலும் தன் மகனுக்காகவாவது தன் மனைவி திரும்பி தன்னிடம் வரவேண்டுமென விரும்புகிறார் சுரஃபுதீன். "

அவனை நல்லா படிக்க வேண்டும். எனக்காக இல்லைன்னாலும் என் மகனுக்காகவாவது என் மனைவி வரணும். அவர்கள் வருவாங்கன்னு நான் நம்புகிறேன். அவர்கள் வந்த பிறகுதான் இந்த பரிசு கிடைத்ததுக்கான முழு சந்தோஷமும் எனக்கு கிடைக்கும்" என கண் கலங்கியவாறே முடித்தார் சுரஃபுதீன்.

12 கோடி ரூபாய் பரிசுப் பணத்தில் வரி பிடிக்கப்பட்டது போக, கிட்டத்தட்ட 7.5 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக சுரஃபுதீனுக்குக் கிடைக்கும். வாழ்க்கை நமக்குப் பல சோதனைகளைக் கொடுக்கும். ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படாமல் நமது பாதையில் முன்னேறிச் சென்று கொண்டிருந்தால் வாழ்க்கை நிச்சயம் ஒரு நாள் மாறும் என்பதற்கு உதாரணமாக நிற்கிறார் சுரஃபுதீன்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்