"இப்போ தானே 'ஏடிஎம்' போயிட்டு வந்தோம்... அதுக்குள்ளயா??..." போனில் வந்த 'மெசேஜ்'... ஒரு நிமிடம் ஆடிப் போன வயதான 'தம்பதி'!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஏடிஎம் மையம் சென்று பணம் எடுத்து விட்டு வீட்டிற்கு வந்த தம்பதியினர், அவர்களின் மொபைல் எண்ணிற்கு வந்த மெசேஜ் ஒன்றை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்தே போயுள்ளனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த வயதான தம்பதியரான அன்னபுஷ்பம் மற்றும் நாகராஜ் ஆகியோர், விருதுநகர் சாலையிலுள்ள ஏடிஎம் மையத்தில், கடந்த சில தினங்களுக்கு முன் பணம் எடுக்கச் சென்றுள்ளனர்.

அப்போது அவர்களிடத்தில் ஏடிஎம்-மில் பணம் எடுப்பதற்காக அங்கிருந்த ஒருவர் உதவி செய்துள்ளார். அந்த தம்பதியருக்கான பணத்தை எடுத்துக் கொடுத்த அந்த நபர், அதன் பிறகு, ஏடிஎம் கார்டை அவர்களிடத்தில் திரும்பக் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, வீட்டிற்கு சென்றதும், அவர்களின் மொபைல் எண்ணில், வங்கி கணக்கில் இருந்து சுமார் 57,000 ரூபாயை எடுத்துள்ளதாக செய்தி வந்துள்ளது. இதனைக் கண்டதும், அந்த தம்பதியினர் அதிர்ந்து போயுள்ளனர். உடனடியாக, தங்களுக்கு நடந்த மோசடி குறித்து திருமங்கலம் போலீசாரிடம் புகாரளித்தனர்.

திருமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் வினோதினி தலைமையிலான போலீசார், தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில், ஏடிஎம் மையத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவியை ஆய்வு செய்த போது தான், உண்மை தெரிய வந்தது. வங்கிக்கு பணம் எடுக்க வரும் நபர்களிடம் இருந்து ஏடிஎம் மூலம் பணத்தை எடுத்துக் கொடுத்து விட்டு, பணத்துடன் அதே நிறத்தில் இருக்கும் வேறு கார்டுகளை கொடுத்துள்ளனர். அவர்கள் சென்ற பிறகு, அதே கார்டை பயன்படுத்தி, மோசடி பேர்வழிகள் பணத்தை எடுத்துக் கொள்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து, நடைபெற்ற விசாரணையில் அப்பாவிகளிடத்தில் இந்த மோசடியில் ஈடுபட்டவர் பெயர் தம்பிராஜ் என்பது தெரிய வந்தது. மோசடியில் ஈடுபட்ட தம்பிராஜை போலீசார் தேடி வந்த நிலையில், பேருந்து நிலையம் ஒன்றின் அருகேயுள்ள ஏடிஎம் ஒன்றில் பணம் எடுத்து ஏமாற்றக் காத்திருந்த தம்பிராஜை, கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரின் கூட்டாளிகள், சிவா மற்றும் மாரியப்பன் ஆகிய இருவரும் உடந்தையாக இருந்ததும் தெரிந்தது.

பின்னர், தம்பிராஜின் கூட்டாளிகள் இருவரையும் போலீசார் பிடித்தனர். மோசடி வேலையில் ஈடுபட்ட மூன்று பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியானது. கடந்த இரண்டு வருடங்களாக, தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இதே போல, ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க வரும் வயதானவர்களை குறி வைத்து, உதவி செய்வது போல நடித்து பண மோசடி செய்துள்ளனர்.

கைதான மூன்று பேரிடம் இருந்தும், சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஏடிஎம் கார்டுகள் மற்றும் சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் வரை பறிமுதல் செய்யப்பட்டது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்