‘வெட்டுக்கிளிகள்’ படையெடுப்பு தமிழகத்தை தாக்க வாய்ப்பு உள்ளதா?.. வேளாண்துறை கொடுத்த விளக்கம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வெட்டிக்கிளிகளின் படையெடுப்பு தமிழகத்தை தாக்குமா என வேளாண்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு மற்றொரு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் கென்யா, சோமாலியா உள்ளிட்ட நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. இவை ஒரே நாளில் 80,500 கிலோ பயிர்களை உட்கொள்ளும். இது 35,000 மனிதர்கள் ஒரு நாளில் உட்கொள்ளும் உணவுக்கு சமமாகும். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தியாவை நோக்கி வரும் என ஐ.நா எச்சரித்தது.
கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் தொடங்கிய வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்த ஆண்டு பிப்ரவரி வரை தொடர்ந்தது. இதனால் அந்த மாநிலத்தில் 6,70,000 ஹெக்டர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்துள்ளது. இதன்மூலம் 1000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்துடன் நின்றுவிடுவதே வழக்கம் என்றும், தக்காணப் பீடபூமியை தாண்டி தமிழகம் வரை வந்தது இல்லை என்றும் தமிழக வேளாண் துறை தெரிவித்துள்ளது. ஆனாலும் வெட்டுக்கிளிகளின் நகர்வை மத்திய அரசு மூலம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், ஒருவேளை தாக்குதல் நடைபெற்றால் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் என்ன என்பதையும் வேளாண்துறை வெளியிட்டுள்ளது.
வெட்டுகிளிகள் தாக்குதலை கட்டுப்படுத்த வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என்றும், மாலத்தியான் மருந்தை மிகப் பெரிய தெளிப்பான்கள், தீயணைப்பு வாகங்களின் மூலம் தெளிக்க வேண்டும் என வேளாண்துறை தெரிவித்துள்ளது. அரசின் அனுமதி பெற்று வான்வெளியில் இருந்து மருந்தை தெளிக்கலாம் என்றும் வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்