தமிழருக்கு பொருத்தப்பட்ட குஜராத் பெண்ணுடைய கை.. உயிரிழந்த பெண்ணின் அம்மாவுக்கு தமிழக இளைஞர் செய்துகொடுத்த சத்தியம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குஜராத்தை சேர்ந்த பெண் ஒருவருடைய கரம், தமிழக இளைஞருக்கு பொருத்தப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகால காத்திருப்புக்கு பின்னர் இந்த வாய்ப்பு கிடைத்ததாக உருக்கத்துடன் கூறுகிறார் அந்த இளைஞர்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த 24 வயதான இந்த இளைஞர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் மோசமான விபத்தை சந்தித்திருக்கிறார். அதிக மின்னழுத்த மின்சாரம் தாக்கியதில் இவரது இரண்டு கரங்களும் கடுமையாக சேதமடைந்தன. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரண்டு கரங்களையும் அகற்றவேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன்படி அறுவை சிகிச்சை மூலமாக இரண்டு கரங்களும் அகற்றப்பட்டிருக்கின்றன. இதனை தொடர்ந்து மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவெடுத்த குடும்பத்தினர் கைகளை பெற விண்ணப்பித்தனர்.
காத்திருப்பு
அதைத் தொடர்ந்து இவருக்கு அறுவை சிகிச்சை செய்ய கைகள் கிடைக்காததால் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் இவர் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனிடையே சமீபத்தில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த பெண் ஒருவர் மூளைச்சாவு அடைந்த நிலையில் அவருடைய உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் அனுமதி அளித்திருக்கின்றனர். இந்நிலையில், அவரது கரங்கள் காஞ்சிபுரத்தை சேர்ந்தவருக்கு பொருத்தப்பட முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், சுமார் 1800 கிலோமீட்டர் தூர பயணத்தை 6 - 8 மணி நேரத்தில் கடந்து சென்னை வந்தடைந்துள்ளது பெண்ணின் கரங்கள். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அந்த இளைஞருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றிருக்கிறது. கடந்த மே மாதம் 28-29 ஆகிய தேதிகளில் சுமார் 16 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்திருக்கிறது.
சத்தியம்
இதன்மூலமாக காஞ்சிபுர இளைஞருக்கு மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் கரங்கள் திரும்ப கிடைத்திருக்கின்றன. இதனால் அவர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். இதுகுறித்து பேசிய அவர்,"இந்த அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. 2018 அக்டோபரில் நான் விபத்தைச் சந்தித்த நாளில் என் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்தேன். ஆனால் இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். டாக்டர்கள் மற்றும் எனது வாழ்க்கையை மீண்டும் தொடங்க உதவிய நன்கொடையாளரின் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமில்லை" என்றார்.
மேலும், தனக்கு கரங்களை கொடுத்த பெண்ணின் தாயார் குறித்து பேசிய இளைஞர்," தனது மகளின் கரங்களில் இருந்த டாட்டூக்களை பார்த்து அந்த தாய் கதறியழுதார். ஒரு கரத்தில் இலையும் மற்றொன்றில் பட்டாம்பூச்சியும் இருக்கிறது. இதனை என்னுடைய ஆயுட்காலம் முழுவதும் பத்திரமாக வைத்திருப்பேன் என அந்த தாய்க்கு சத்தியம் செய்திருக்கிறேன்" என்றார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்