'குறைந்து வரும் கொரோனா பாதிப்பு'... 'ஆனா தமிழகத்தை 3-வது அலை தாக்குமா'?... அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் ஏறத்தாழ 50 ஆயிரம் படுக்கைகள் காலியாக இருக்கின்றன.

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை சாலையில் ஆம்புலன்ஸ் வாகனங்களின் சத்தமாகவும், மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காமல் மக்கள் ஆம்புலன்ஸ் வாகனங்களிலேயே சிகிச்சை பெறும் நிலையைப் பார்க்க முடிந்தது. ஆனால் தமிழக அரசு எடுத்த துரித நடவடிக்கையின் காரணமாக தற்போது தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது.

இந்தச்சூழ்நிலையில் மக்களுக்குத் தடுப்பூசி போடும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட 3.65 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளைச் சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு கிடங்குக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து, அங்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பேசிய அமைச்சர், ''தமிழகத்தில் ஏறத்தாழ 50 ஆயிரம் படுக்கைகள் கலியாக இருக்கின்றன எனத் தெரிவித்தார். மேலும் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. முதல்-அமைச்சர் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின் காரணமாகத்தான், 21-ந் தேதிக்குப் பிறகு மத்திய அரசு 75 சதவீத தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து மாநில வாரியாக பிரித்தனுப்புவோம் என்று கூறியிருக்கிறது.

தமிழகத்தில் இதுவரை 97 லட்சத்து 65 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கையிருப்பில் 85 ஆயிரம் இருந்தது. தற்போது 3 லட்சத்து 65 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இந்த தடுப்பூசிகள் தேவைக்கு ஏற்ப மாவட்டங்களுக்கு பிரித்தனுப்பப்படும்'' என அமைச்சர் தெரிவித்தார். இதற்கிடையே இங்கிலாந்தில் 3-வது அலை உருவாகி தினசரி பாதிப்பு 6 ஆயிரம் என்ற அளவில் உயர்ந்து வருகிறது. இங்கிலாந்தில் வந்ததால், தமிழகத்திலும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் 3-வது அலை வரும் எனக் கூறப்படுகிறது.

இதற்கு விளக்கமளித்த அமைச்சர், ''கொரோனா 3-வது அலை வந்தாலும் அதைச் சமாளிக்கத் தேவையான கட்டமைப்பு வசதிகள் தமிழகத்தில் இருக்கிறது. இப்போது அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்பச் சுகாதார நிலையங்கள் அனைத்திலும் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகள் ஏற்படுத்தப்படுகின்றன. எனவே 3-வது அலை வந்தாலும் அச்சப்படத்தேவையில்லை. அதே நேரத்தில் அது வராமல் இருந்தால் நல்லது'' எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்