தொடர்ந்து 3 வருஷமாக ‘முதலிடம்’.. சாதனை படைத்த ‘தமிழ்நாடு’.. பெருமையோடு ‘முதல்வர்’ பதிவிட்ட ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

தேர்ந்த அரசியல் கட்டுரைகளுக்கும், தேர்தல் கருத்துக்கணிப்புகளுக்கும் புகழ்பெற்ற ‘இந்தியா டுடே’ பத்திரிக்கை ஒவ்வொரு ஆண்டும் சிறந்த மாநிலங்களில் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கருத்துக்கணிப்பில், அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த 3 வருடங்களாக இந்த கருத்துக்கணிப்பில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் இமாச்சால பிரதேசம் 2-வது இடத்தையும், பஞ்சாப் 3-வது இடத்தையும், கேரளா 4-வது இடத்தையும், குஜராத் 5-வது இடத்தை பிடித்துள்ளது. அதேபோல் 6 முதல் 10 வரையிலான இடங்களை, ஹரியானா, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, தெலுங்கானா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்கள் தக்க வைத்துள்ளன. 11 முதல் 20 வரையிலான இடங்களை கர்நாடகா, உத்தரகண்ட், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஒடிசா, உத்தரபிரதேசம், ஜார்கண்ட், அசாம், பீகார் ஆகிய மாநிலங்கள் பிடித்துள்ளன. இதில் பீகார் மாநிலம் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக 20-வது இடத்தை பிடித்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து முதல்வர் பழனிசாமிக்கு வரும் டிசம்பர் 5ம் தேதி இந்தியா டுடே விருது வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் கருத்துக்கணிப்பில் தமிழகம் முதலிடம் பிடித்ததற்கான கடிதத்தை முதல்வர் பழனிசாமிக்கு இந்தியா டுடே அனுப்பியுள்ளது. இந்த தகவலை முதல்வர் பெருமையுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ‘இந்தியா டுடே இதழ் நடத்திய ஆய்வில் ஒட்டுமொத்த துறைகளில் சிறந்து விளக்கக்கூடிய மாநிலங்களுக்கான பட்டியலில் தமிழ்நாட்டை முதலிடமாக தேர்ந்தெடுத்து கடிதம் அனுப்பியுள்ளது. இந்தியா டுடே இதழ் நிர்வாகத்திற்கு தமிழக அரசு சார்பில், எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

மேலும், ‘அரசு அதிகாரிகள், பணியாளர்களின் அயராத உழைப்பு, அர்ப்பணிப்பாலும், தமிழக மக்களின் ஒத்துழைப்பாலுமே தொடர்ந்து 3-வது முறையாக சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வாகி சாதனை புரிந்துள்ளது. இவ்விருதினை அனைவருக்கும் அன்போடு சமர்ப்பிக்கிறேன். தொடர்ந்து தமிழக வளர்ச்சிக்கு ஒற்றுமையாக உழைப்போம்’ என முதல்வர் பழனிசாமி பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்