'தமிழகத்தில் முழு ஊரடங்கு மே 31 வரை நீட்டிப்பா'?... 'மருத்துவ நிபுணர் குழுவுடன் நடைபெறவுள்ள ஆலோசனை'... முக்கிய முடிவுகள் வெளியாகும் என தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துவருவதால் முழு ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 10ஆம் தேதிமுதல் 24ஆம் தேதிவரை இரண்டு வாரகாலத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு அமலுக்கு வந்தபோதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருவதால் இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டிப்பது மட்டுமே ஒரே வழி என மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டது.

இதுகுறித்து, மருத்துவ வல்லுநர்களுடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் மருத்துவ குழுவினர் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் முழு ஊரடங்கை நீடிப்பதா அல்லது தளர்வுகளை அறிவிப்பதா என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் சென்னையைத் தொடர்ந்து, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருவதால் முழு ஊரடங்கு உத்தரவைத் தமிழக அரசு நீட்டிக்கும் வாய்ப்புகள் அதிகம் எனவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்