"இது அமைச்சர் பதவி அல்ல... முள்கிரீடம்!.. கொஞ்சம் மிஸ் ஆனாலும்"... கொரோனா காலத்தில்... சுகாதாரத்துறை மா. சுப்பிரமணியனிடம் கொடுக்கப்பட்டது ஏன்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள மா. சுப்பிரமணியனுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது.

2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றது. அதிலும், 25 ஆண்டுகளுக்கு பிறகு திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.

அதன்படி, இன்று காலை 9 மணியளவில் ஆளுநர் மாளிகையில் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து, மற்ற அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் தான், தமிழகத்தின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின் நியமனம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதற்கு மிக முக்கிய காரணம் கொரோனா.

2019 டிசம்பர் மாதம் சீனாவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட இந்த கொடிய வைரஸ், ஒரு ஆண்டு கடந்த பிறகும், தற்போதுவரை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா தொற்றின் முதல் அலையின் போது, இந்த வைரஸைப் பற்றி புரிந்துகொள்வதற்கே சாமானிய மக்களுக்கு நீண்ட காலம் தேவைப்பட்டது. அதன் விளைவாக, வைரஸ் பரவலை தடுக்க நாடு தழுவிய லாக்டவுன் அறிவிக்கப்பட்டு பல லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரத்தை இழந்தனர்.

எனினும், தமிழகத்தில் முதல்முறையாக கொரோனா கண்டறியப்பட்ட நாள் முதல் தமிழக சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை போர்கால அடிப்படையில் மேற்கொண்டு துரிதமாக செயல்பட்டு உயிரிழப்புகளை குறைத்தது. ஒரு கட்டத்தில் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு அதிகமான RT-PCR பரிசோதனைகள் செய்யும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக இருந்தது. அதன் விளைவாகத்தான், கடந்த செப்டம்பர் மாதம் முதல் தமிழகத்தில் சற்று இயல்புநிலை திரும்பிக்கொண்டிருந்தது.

ஆனால், உலக நாடுகளே இந்தியாவைப் பார்த்து அஞ்சி நடுங்கும் அளவிற்கு கொரோனாவின் 2வது அலை மிக மோசமாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இந்தியாவே மூச்சுவிடத் திணறுகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தின் நிலை மோசமில்லை என்றாலும், தமிழகத்தின் தினசரி கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டுவருகிறது. நேற்று (6.5.2021) மட்டும் தமிழகத்தில் 24,898 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வைரஸ் பரவலின் வேகம் 10% வரை அதிகரித்துள்ளது. இதே வேகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்தால் மிக மோசமான நிலைக்கு தமிழகம் தள்ளப்படும். ஒரு வேலை மீண்டும் லாக்டவுன் அறிவித்தால், தமிழகத்தின் பொருளாதாரமும், மக்களின் வாழ்வாதாரமும் அதளபாதாளத்திற்கே சென்றுவிடும்.

இந்நிலையில், முழு ஊரடங்கை தவிர்த்து, அதே சமயம் கொரோனா பரவலை கட்டுப்படுத்தி, அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்து, உயிரிழப்புகளை குறைத்து, தமிழகத்தை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவது என்பது கத்தி மேல் நடப்பதை விட மிகமிக சவாலான ஒரு காரியமாகும். அத்தகைய சவாலைத் தான், தமிழகத்தின் புதிய மருத்துவம்  மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எதிர்கொண்டுள்ளார்.

உண்மையில், அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள அமைச்சர் பதவி என்பது மகுடம் அல்ல, முள்கிரீடம். கடந்த திமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்த இவர், பல்வேறு திட்டப்பணிகளை சிறப்பாகச் செய்தவர். அவரது பணி பலராலும் பாராட்டப்பட்டது. பின்னர், 2016 சட்டமன்ற தேர்தலில், சைதாப்பேட்டையில் இருந்து எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தகைய சூழலில், அவரது நிர்வாகத்திறமையை மீண்டும் ஒரு முறை நிரூபிப்பதற்கு தற்போது காலம் அவரிடம் இந்த பொறுப்பை கையளித்துள்ளது.

கொரோனாவால் வாழ்வில் மறக்க முடியாத வலியை அனுபவித்தவர்களுள் மா.சுப்பிரமணியனும் ஒருவர். கடந்த அக்டோபர் மாதம், இவரின் இளைய மகன் அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கொரோனா ஏற்படுத்தும் உடல்நல, மனநல பிரச்சினைகளை கண்கூடாக பார்த்தவர் என்பதால், இவருக்கு இந்த பேரிடர் பற்றிய புரிதல் அதிகம் உள்ளது. இந்த கொடிய வைரஸின் கோரத்தால் தனது அன்பு மகனை பறிகொடுத்த மா.சுப்பிரமணியன் தான், இன்று தமிழக மக்களை கொரோனாவிடம் இருந்து பாதுகாக்கும் அரும்பணியை கையிலெடுத்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்