'பயமுறுத்தும் எண்ணிக்கை'...'தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா'?... 'தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்' அவசர ஆலோசனை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் கொரோனாவால் தினசரி பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்த நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக அதன் பாதிப்பு அதிகரித்துக் கொண்ட வருகிறது. ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்துக்குக் கீழே இருந்த நிலையில், தற்போது 25 ஆயிரத்துக்கு மேல் தாண்டி விட்டது. அதிலும், நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 26 ஆயிரத்து 624 ஆக உயர்ந்து விட்டது. கடந்த 85 நாட்களில் இதுதான் அதிக அளவாகும்.

தமிழகத்தைப் பொறுத்தவரைக் கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி புதிதாக கொரோனா பாதிப்போரின் எண்ணிக்கை 800-க்கும் கீழ் குறையத் தொடங்கியது. தொடர்ந்து குறைந்து வந்த தொற்று பாதித்தோர் எண்ணிக்கை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. தமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 66 நாட்களுக்குப் பின்னர் நேற்று மீண்டும் 800-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 50 நாட்களுக்குப் பின்னர் கொரோனா சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

உயிரிழப்பைப் பொறுத்தவரை நேற்று 4 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அந்தவகையில் சென்னை, கோவை, மதுரை, நாகப்பட்டினத்தில் தலா ஒருவரும் என 4 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரையில் 12 ஆயிரத்து 551 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து 553 பேர் நேற்று குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர்களுடன் அவசர ஆலோசனை   நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் காணொளியில்  மூலம் அவசர ஆலோசனை நடத்துகிறார்.தமிழகத்தில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியான நிலையில் இந்த அவசர ஆலோசனை நடத்தப்படுகிறது. இதில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள  இடங்களில் ஊரடங்கு குறித்து முடிவு எடுக்கப்படும்  எனத் தெரிகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்