தமிழகத்தில் வேகமெடுக்கும் கருப்பு பூஞ்சை பாதிப்பு!.. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்ட மருத்துவ வல்லுநர் குழு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு குறித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு குறித்த இடைக்கால அறிக்கையை முதலமைச்சரிடம் சிறப்பு பணிக்குழு தாக்கல் செய்தது. மருத்துவக் கல்வி இயக்குனர் தலைமையில் கருப்பு பூஞ்சை நோய்களை தடுப்பதற்கும் சிகிச்சை அளிப்பதற்கான வழிமுறைகளை வகுக்க 13 பேர் கொண்ட சிறப்பு பணிக்குழுவை கடந்த மே மாதம் தமிழக அரசு அமைத்தது.

அந்த குழுவினர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து கருப்பு பூஞ்சை நோய் தொடர்பான இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய குழுவில் இடம்பெற்றுள்ள மருத்துவர் மோகன் காமேஸ்வரன், "தமிழகத்தில் இதுவரை 2,700 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நோய் குறித்து விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டுள்ளதால் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படக்கூடிய நோயாளிகளின் தினசரி எண்ணிக்கை 20 ஆக குறைந்துள்ளது.

இதுவரை 148 நபர்கள் கருப்பு பூஞ்சை நோயால் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் இறப்பு சதவிகிதம் 6 சதவீதமாக உள்ளது. இடைக்கால அறிக்கையில் சென்னை, கோவை, திருச்சி, சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களில் இந்நோய் பாதிப்பு அதிகமாக கண்டறியப்பட்டுள்ளது. அதனை கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகளில் தனி சிகிச்சை பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்நோய்க்கான தடுப்பு மருந்துகளை பெற்றுத் தந்ததன் அடிப்படையில் சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. ஒரிரு வாரங்களில் கருப்புப் பூஞ்சை நோயை முழுமையாக கட்டுப்படுத்திவிடுவோம்.

கருப்பு பூஞ்சை நோய் தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் அதிகளவில் உள்ளது. கருப்பு பூஞ்சை நோய் உருமாற்றம் அடையாது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை பாதிப்பு குறைவுதான்" என்று அவர் கூறினார்.

இதற்கிடையே, கரும்பூஞ்சை நோய் சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும், தூசி மிகுந்த இடங்களுக்குச் செல்லக்கூடாது, ரத்த சர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டும். சர்க்கரை அளவு 180க்கு மேல் இருப்பது, வாந்தி, வயிற்றுவலி, தொடர் தாகம், சிறுநீர் போவது அதிகரித்தல், குழப்பம் இருக்கிறதா என கவனிக்க வேண்டும்.

முகத்தின் ஒருபகுதியில் வீக்கம், மூக்கில் ஒரு துவாரத்தில் தொடர்ச்சியாக அடைப்பு, நெற்றியில் கடும்வலி, கண்சிவத்தல், இரட்டைப்பார்வை, வாய்ப்புண், பல் வலி அல்லது பல் வலுவிழத்தல், கருப்பு அல்லது பழுப்பு நிற திரவம் மூக்கில் இருந்து வடிதல் இருந்தால் மருத்துவமனையை அணுக வேண்டும். மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆம்போடெரிசின் பி டியோக்ஸிகொலேட், லிபோசோமல், ஆம்போடெரிசின் பி போன்ற மருந்துகளை சிகிச்சைக்கு பயன்படுத்தலாம். ஆம்போடெரிசின் வகை மருந்துகளை ஏற்றுக்கொள்ளாத நோயாளிகளுக்கு பொசகோனசோல் , இஸவுகோனசோல் மருந்துகளை பயன்படுத்தலாம் என்று வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டுள்ளன.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்