சிபிஎஸ்இ-க்கு ரூட் க்ளியர்!.. தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு உண்டா? இல்லையா?.. முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக நாளை ஆலோசனை கூட்டம் நடத்த இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக பிளஸ் 2  பொதுத்தேர்வு மற்றும் சிபிஎஸ்இ பிளஸ்-2 பொது தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. மேலும், ஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டு, பின்னர் பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என அறிவித்தனர்.

இந்நிலையில், சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இதில், அமித்ஷா, பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்துக்குப் பிறகு சிபிஎஸ்இ பிளஸ்-2 பொது தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக நாளை (ஜூன் 2) கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தவுள்ளார். மேலும், முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி முடிவு அறிவிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், தேர்வுகள்துறை இயக்குநர் உஷாராணி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்