காதலி வீட்டில் ‘புதைக்கப்பட்ட’ நகைகள்.. காட்டிக்கொடுத்த ‘மீசை’.. தி.நகர் நகைக்கடை கொள்ளையில் வெளியான ‘பரபரப்பு’ தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தி. நகர் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் தலைமறைவாக இருந்த கொள்ளையரின் மீசையை துப்பாக வைத்து அனைவரையும் போலீசார் பிடித்துள்ளனர்.

சென்னை தி. நகர் மூசா தெருவில் ராஜேந்திரகுமார் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையில் கடந்த மாதம் சுமார் ரூ 2.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கொள்ளையர்களில் ஒருவர் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ் என்கிற மார்க்கெட் சுரேஷ், அவரது கூட்டாளி அப்பு என்கிற வெங்கடேஷன், அமல்ராஜ் மற்றும் சுரேஷின் காதலி கங்காதேவி என்பது தெரியவந்தது. இதனை அடுத்து கங்காதேவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவரது வீட்டின் பின்புறத்தில் மண்ணுக்குள் நகைகளை புதைத்து வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்து மீட்டனர்.

இதுகுறித்து தெரிவித்த போலீசார், தி.நகர் கொள்ளை சம்பவம் நடந்த மூசா தெருவில் தொடங்கி திருவள்ளூர் புட்லூர் வரை சுமார் 400-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டது. நகைக்கடையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்தபோது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் முகக்கவசத்தை ஒரு சில நொடிகள் அகற்றிவிட்டு மீண்டும் மாட்டும் காட்சி பதிவாகியிருந்தது.

அப்போது அவரது மீசை வெளியே தெரிந்தது. அதை பழைய கொள்ளையர்களின் படங்களுடன் ஒப்பிட்டு பார்த்தபோது, அது கோடம்பாக்கம் மார்க்கெட் சுரேஷ் என்பது தெரியவந்தது. சுரேஷும், வெங்கடேஷும் கண்ணகி நகரில் ஒரு பைக்கை திருடி, அதில் தி.நகர் வந்துள்ளனர். இரும்பு கிரில்கேட்டை உடைப்பதற்கு கடப்பாரை உள்ளிட்ட இரும்பு பொருட்களை அமல்ராஜ் கொடுத்துள்ளார்.

நகைக்கடையில் கொள்ளை அடித்து முடித்ததும், ஒரு ஆட்டோவில் ஏறி மார்கெட் சுரேஷ், அமல்ராஜ் மற்றும் வெங்கடேஷ் ஆகிய மூவரும் திருவள்ளூர் புட்லூரில் உள்ள கங்காதேவி வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு நகைகளை பங்கு போட்டதும் அமல்ராஜும், வெங்கடேஷும் ஆட்டோவில் திருவண்ணாமலை சென்றுவிட்டனர். பின்னர் சுரேஷ் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.

இந்த சமயத்தில் போலீசார் கங்காதேவியை கண்டுபிடித்து கைது செய்தனர். கங்காதேவியை பார்ப்பதற்காக சுரேஷ் வந்தபோது அங்குள்ள வியாபாரிகள் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதன்பின்னர் கங்காதேவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்டிருந்த நகைகள் மீட்கப்பட்டன. மேலும் திருவண்ணாமலையில் பதுங்கியிருந்த அமல்ராஜ், வெங்கடேஷ் ஆகிய இருவரையும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்த நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கொள்ளையர்களை விரைந்து பிடித்த மாம்பலம் உதவி ஆணையர் கலியன், வளசரவாக்கம் உதவி ஆணையர் மகிமை வீரன் உட்பட தனிப்படை போலீசார் அனைவரையும் கூடுதல் ஆணையர் தினகரன் பாராட்டினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்