'வீட்டுக்கு வந்து அம்மாவை தேடிய மகனும், மகளும்'... 'என்ன காரியம் பா செஞ்சிட்ட'... ஒரு நொடி கோபத்தால் சுக்கு நூறாகிய குடும்பம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கணவன், மனைவிக்குள் வரும் சந்தேகம் என்பது புற்றுநோயையை விட ஆபத்தானது எனக் கூறுவார்கள். அந்த வகையில் ஒரு நொடி வந்த கோபத்தால் மொத்த குடும்பமும் சிதைத்துப் போன சோக சம்பவம் நடந்துள்ளது.

புதுச்சேரி வேல்ராம்பட்டு திருமாள் நகர் 4-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் விஜயன். 58 வயதான இவர், சுல்தான்பேட்டை அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது முதல் மனைவி இறந்து விட்ட நிலையில், 2-வதாக சாந்தி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர் வேல்ராம்பேட்டில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ள நிலையில், மகன் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியிலும், மகள் அரசு பொறியியல் கல்லூரியிலும் படித்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் 52 வயதான மனைவி மீது விஜயனுக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது. அவரது நடத்தை குறித்து அவ்வப்போது பிரச்சனை செய்வதை விஜயன் வழக்கமாக வைத்திருக்கிறார். அந்தவகையில் நேற்று முன்தினம் லாஸ்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு மகள் சென்று விட்ட நிலையில், மகனும் காலை 5.30 மணிக்கு எழுந்து விளையாடச் சென்று விட்டார். அப்போது வீட்டிலிருந்த விஜயனுக்கு, சாந்திக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், விஜயன் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்றார்.

உடனே அவர் வீட்டிலிருந்து ஒரு துணியை எடுத்து மனைவி சாந்தியின் காலை கட்டிப் போட்டார். பின்னர் அவரது கழுத்தில் கத்தியால் சரமாரியாக விஜயன் குத்தினார். இதில் அவர் துடிதுடித்து சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்து போனார். ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற விஜயன், ஒரு நொடி ஏற்பட்ட கோபத்தால் அனைத்தையும் செய்து முடித்தார். பின்னர் தான் அவருக்குத் தான் என்ன செய்தேன் என்பது புரிந்தது. இதனைத் தொடர்ந்து செய்வதறியாமல் தவித்த விஜயன் தனது மனைவியைக் கொலை செய்யப் பயன்படுத்திய கத்தியை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்திற்குச் சென்றார்.

அங்கு பணியிலிருந்த போலீசாரிடம் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டதாகக் கூறி சரண் அடைந்தார். அவரிடம் இருந்து கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன்பின் முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீட்டுக்குச் சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு பல்வேறு ஆவணங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதன்பின் அங்கிருந்து சாந்தியின் பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே சம்பவம் குறித்து அறிந்து வீட்டிற்கு வந்த விஜயன், சாந்தி தம்பதியரின் மகள் மற்றும் மகன் இருவரும் அம்மா எங்கே என வீடு முழுக்க கதறியபடி சென்றார்கள். உன்னோட கோபத்திற்காக அம்மாவை அநியாயமாகக் கொன்று விட்டாயே அப்பா என இருவரும் கதறி அழுதார்கள். இது அங்கிருந்தவர்களின் கண்களைக் குளமாக்கியது. ஒரு நிமிட கோபம் மொத்த குடும்பத்தின் சந்தோசத்தைக் குலைத்தது தான் சோகத்தின் உச்சம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்