ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி மனு.. உச்சநீதிமன்றம் தடாலடி... நீதிபதிகள் எச்சரிக்கை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரிய, வேதாந்தா நிறுவனத்தின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, கடந்த ஆண்டு நடந்தப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் பலியானதைத் தொடர்ந்து, அந்த ஆலையை மூட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. பின்னர் அந்த ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. அந்த  அனுமதியை கடந்த பிப்ரவரி 18-ம் தேதி உச்சநீதிமன்றம் ரத்துசெய்து, சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் தாங்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்க போதிய நேரம் இல்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்து இருப்பதால், பராமரிப்பு பணிகளுக்காக ஆலையை திறக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று  கூறப்பட்டிருந்தது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்பு பணி மற்றும் கழிவுகளை அகற்றுவதற்காக திறக்க அனுமதி வேண்டும் என்று, வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது

இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஏற்கனவே கழிவுகளை அகற்ற கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது, அது மட்டுமல்லாமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும் போது, அதனை மீறி உச்ச நீதிமன்றம் விசாரிக்க முடியாது. இனியும், இது போன்று வழக்கு தொடர்ந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்த நீதிபதிகள் வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

மற்ற செய்திகள்