பஸ்ஸை ஓட்டும்போதே ‘வலிப்பு’ வந்து மயங்கிய டிரைவர்.. சட்டென ‘கண்டக்டர்’ செய்த செயல்.. அதிர்ச்சி சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அரசு பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்த ஓட்டுநர் திடீரென வலிப்பு வந்து மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், வேலூரில் இருந்து ஓசூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டு இருந்துள்ளது. அப்போது திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரம் அருகே பேருந்து வந்தபோது திடீரென ஓட்டுநர் சங்கருக்கு வலிப்பு ஏற்பட்டு அப்படியே மயங்கி கீழே விழுந்துள்ளார்.

அப்போது பேருந்தின் முன் பக்க இருக்கையில் அமர்ந்திருந்த நடத்துனர் வேலு இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து செல்வதை உணர்ந்த நடத்துனர் வேலு, உடனே பேருந்தை நிறுத்த போராடியுள்ளார். இதனை அடுத்து சாலையோரத்தில் இருந்த தடுப்புச்சுவர் மீது பேருந்து மோதி நின்றுள்ளது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனாலும் நடத்துனர் வேலுவின் சாதுரியத்தால் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.

இதனை அடுத்து மயங்கி விழுந்த ஓட்டுநர் சங்கரை ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அங்கிருந்த பொதுமக்கள் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து வாணியம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்