காவேரி மருத்துவமனையில் வெற்றிகரமான இதய உறுப்புமாற்று சிகிச்சையின் வழியாக மறுவாழ்வைப் பெற்றிருக்கும் 63 வயதான முதியவர்.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

காவேரி மருத்துவமனையில் வெற்றிகரமான இதய உறுப்பு மாற்று சிகிச்சையின் மூலம் 63 வயதான முதியவர் மறுவாழ்வைப் பெற்றிருக்கிறார்.

Advertising
>
Advertising

இந்தியாவில் முதன் முறையாக ஒரு வயதான நபருக்கு இதய உறுப்புமாற்று சிகிச்சைக்கு பாலமாக இம்பெல்லா இயந்திர சுழற்சி ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது  இந்நோயாளிக்கு நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், மிகப்பெரிய அளவில் மாரடைப்பு, இதய கீழறையில் இயல்புக்கு மாறான இதயத்துடிப்பு மற்றும் இதய அதிர்ச்சி என பல பாதிப்புகள் ஏற்கனேவே இருந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் முன்னணி பல்நோக்கு சிறப்பு சிகிச்சை மையமான காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு அங்கமான சென்னை காவேரி மருத்துவமனை, இதய அதிர்ச்சியுடன் ஒரு சிக்கலான மருத்துவ வரலாற்றைக் கொண்டிருந்த, 63 வயதான ஒரு முதியவருக்கு இதய உறுப்புமாற்று சிகிச்சையை வெற்றிகரமாக செய்திருக்கிறது.  இந்தியாவில் இதுபோல முதன்முறையாக மேற்கொள்ளப்படும் ஒரு அணுகுமுறையாக ஒரு இதய உறுப்புமாற்று சிகிச்சை அவருக்கு கிடைக்கப்பெறும் வரை அவரது இதய செயல்பாடுக்கு ஆதரவளிக்க pVAD என அழைக்கப்படும் இம்பெல்லா இதய கீழறை உதவி சாதனம் இந்நோயாளிக்கு பொருத்தப்பட்டது.  உலகின் மிகச்சிறிய இதய பம்ப் எனவும் அறியப்படும் இம்பெல்லா, இதய கீழறைகளிலிருந்து உடலின் பிற பகுதிகளுக்கு இரத்தத்தை பம்ப் செய்வதில் செயல்திறன் குறைந்து கொண்டே வருகின்ற இதயத்திற்கு உதவுகிறது. இதயம் ஓய்வெடுக்கவும், பாதிப்பு தாக்கத்திலிருந்து மீளவும் இது உதவி செய்கிறது. 

குறைந்த இரத்த அழுத்தத்திற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடுமையான மார்பு வலி ஏற்பட்டதற்குப் பிறகு உள்ளூர் மருத்துவமனையில் இரண்டு வார காலத்திற்கு 63 வயதான இந்த முதியவர், மூச்சுத்திணறல் பிரச்சனைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அதே நேரத்தில் இதய கீழறையில் அதிவேக இதயத்துடிப்பு பிரச்சனை இவருக்கு ஏற்பட்டது. (இதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை எனில், மாரடைப்பிற்கு இது வழிவகுக்கும்) இந்நிலையில் மின்அதிர்ச்சி சிகிச்சையின் மூலம் இவர் மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டார். அதன்பிறகு இதயத்தின் பம்பிங் செயல்பாட்டை மேம்படுத்துவதற்காக பல்வேறு மருந்துகள் இவருக்கு தரப்பட்டது என்றாலும், இவரது உடல்நிலை மோசமாகிக் கொண்டே வந்தது. இதனால் அபாயகட்டத்தில் இவர் இருந்தார். எனவே, உயர் அவசர நிலை சிகிச்சைக்காக இவர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார். 

இதுகுறித்து பேசிய  காவேரி மருத்துவமனையின் இதய சிகிச்சை மருத்துவரும், சுழற்சி ஆதரவு சேவை நிபுணருமான டாக்டர் R. அனந்தராமன், “ஒரு அவசரநிலை ஆஞ்சியோகிராம் பரிசோதனைக்காகவும் மற்றும் உயர் சிகிச்சைக்காகவும் அவரது குடும்பத்தின் ஒப்புதலோடு ஹைபிரிட் கேத் லேபிற்கு நாங்கள் உடனடியாக அவரை அழைத்துச் சென்றோம்.  கீழ்நோக்கி செல்லும் இவரது முன்புற தமனி முழுமையாக அடைபட்டிருந்து சரிசெய்ய முடியாத அளவிற்கு முற்றிலும் சேதமடைந்திருந்தது. அவரது இடது கீழறை மெலிந்திருந்ததோடு அதன் செயல்பாடும் மிகவும் மோசமாக இருந்தது. இந்த நிலையில் அவர் உயிர் பிழைப்பதற்கான சாத்தியம் 10%-க்கும் குறைவாகவே இருந்தது. “இதய மீட்பு செயல்திட்ட வசதி” எங்களிடம் இருப்பதால், அவர் உயிரை காப்பாற்றுவதற்கும் மற்றும் மூளை, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் உட்பட, உடலின் பிற உறுப்புகளுக்கு சேதம் ஏற்படாமல் தடுக்கவும் ஒரு இம்பெல்லா சாதனத்தை உடனடியாக இவருக்கு பொருத்த நினைத்தோம்.

இதய மீட்பு செயல்திட்ட வசதி இல்லையென்றால், இம்பெல்லா சாதனத்தை ஏற்பாடு செய்வதற்கு 24 முதல் 48 மணி நேரம் வரை எடுத்திருக்கும். இம்பெல்லா pVAD சாதன ஆதரவு அமைப்பு, இதயத்தின் இடது கீழறையிலிருந்து இரத்தத்தை அகற்றி உடலின் பிற பகுதிகளுக்கு பம்ப் செய்கிறது. இதன் மூலம் இடதுபுற இதய கீழறை ஓய்வெடுக்கவும் மற்றும் மீட்சி பெறவும் முடியும். அதே நேரத்தில் பிற உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படும்.  இந்த தற்காலிக மெக்கானிக்கல் இதய இரத்தநாள ஆதரவு சாதன அமைப்பானது, 7 நாட்கள் அல்லது அதற்கும் அதிகமான நாட்களுக்கு ஒரு நோயாளியின் இதயம் செயல்பாட்டில் இருக்குமாறு  செய்வதற்கு உதவும். உயிர்காக்கும் சிகிச்சை பிரிவில் நுரையீரலில் திரவத் தேக்கத்திற்காகவும் மற்றும் குறைவான இரத்த அழுத்தத்திற்காகவும் இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இவருக்குப் பொருத்தப்பட்டிருந்த இம்பெல்லா சாதனம் சிறப்பாகவே செயலாற்றியது,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "இதயத்தின் பம்பிங் செயல்திறன் குறைந்திருந்ததால், இவரது சிறுநீரகங்கள் தொடக்கத்தில் பாதிக்கப்பட்டிருந்தன. இம்பெல்லா பொருத்தப்பட்டவுடன், சிறுநீர் வெளியேற்ற அளவு அதிகரித்தது. இதய செயலிழப்பை சுட்டிக்காட்டும் அறிகுறிகளிலும் மற்றும் சுவாச மண்டல செயல்பாடுகளிலும் முன்னேற்றம் காணப்பட்டது. இதன் காரணமாக செயற்கை சுவாச சாதனத்தின் ஆதரவை எங்களால் விலக்கிக்கொள்ள முடிந்தது. எங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு மிகப்பெரிய மாரடைப்பின் காரணமாக இதய செயல்பாட்டில் முன்னேற்றம் காணப்படவில்லை. எனவே, உயிர் பிழைப்பதற்காக இம்பெல்லாவின் ஆதரவை இவர் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இருந்தது.

அதைத் தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் உள்ள இதயம் மற்றும் நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை குழுவினரால் இவர் பரிசோதிக்கப்பட்டார். இதய உறுப்புமாற்று சிகிச்சை அல்லது உரிய நேரத்திற்குள் தானமாக பெறப்படும் இதயம் கிடைக்கப்பெறவில்லை எனில், உறுப்புமாற்று சிகிச்சை செய்யப்படும் வரை ஒரு இடைக்கால ஏற்பாடாக நிரந்தர இடது இதய கீழறை உதவி சாதனம் (LVAD) பொருத்தப்பட வேண்டும் என்ற ஆலோசனை வழங்கப்பட்டது. உறுப்புமாற்று சிகிச்சைக்கான காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்ட அதே நேரத்தில் LVAD செயல்முறைக்காக அவர் தயார்நிலையில் வைக்கப்பட்டார்.

இம்பெல்லா சாதனத்தின் மூலம் இதய செயல்பாடு மேற்கொள்ளப்பட்டபோது 8-வது நாளன்று LVAD சிகிச்சையை இவருக்கு மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. எனினும், LVAD பொருத்தப்படுவதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக, தானம் அளிக்கப்பட்ட ஒரு இதயம் இவருக்கு கிடைக்கப்பெற்றது. டாக்டர். குமுத் திட்டால் தலைமையிலான இதயம் மற்றும் நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை குழுவோடு இதயவியல் நிபுணர்கள், இதய உணர்விழப்பு சிகிச்சை மருத்துவர்கள், உறுப்புமாற்று சிகிச்சைக்கான உயிர்காப்பு சிகிச்சை குழுவினர் ஆகியோரும் ஒருங்கிணைந்து இந்த அறுவை சிகிச்சையில் பங்கேற்றனர். இரண்டு வாரங்களுக்குப் பிறகு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட இவர் இப்போது உடல்நலத்தோடு நன்றாக இருக்கிறார்,” என்று டாக்டர். அனந்தராமன் தெரிவித்திருக்கிறார்.

சென்னை காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் & செயலாக்க இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் இச்சிகிச்சை செயல்முறை குறித்து பேசுகையில், “ இந்நோயாளிக்கு சிக்கலான மருத்துவ வரலாறு இருந்ததாலும், எங்களது மருத்துவமனைக்கு வந்து சேர்வதற்குள் அவரது இதயம் மிகவும் பலவீனமடைந்திருந்ததாலும் சூழல் அதிக சவாலானதாகவே இருந்தது. இம்பெல்லா சாதனத்தை நாங்கள் பயன்படுத்தினோம். மேலும் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு முன்னதாக இதய செயல்பாட்டை வெற்றிகரமாக நாங்கள் தக்க வைத்திருந்தோம். காவேரி மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள உலகத்தரமான உட்கட்டமைப்பு வசதி மற்றும் பிரத்யேக இதயமீட்பு செயல்திட்டம் / இதயம் மற்றும் நுரையீரல் உறுப்புமாற்று செயல்திட்ட சிகிச்சை குழுவினரின் நிபுணத்துவத்தால் இந்த வெற்றிகர சிகிச்சை சாத்தியமானது.

மேலும் இம்பெல்லா பொருத்தும் செயல்முறையை மேற்கொள்ளும் திறன்கொண்ட வெகுசில உயர் மருத்துவமனைகளுள் ஒன்றாக காவேரி மருத்துவமனை இருக்கிறது. சிறப்பான உயர் தொழில்நுட்ப சாதன வசதிகளைக் கொண்டிருக்கும் ஹைபிரிட் கேத் லேப், நோயாளியை இடமாற்றம் செய்வதற்கான அவசியமின்றி மிகவும் சிக்கலான செயல்முறைகளையும், அறுவை சிகிச்சைகளையும் அதே அறையிலேயே செய்வதற்கு உதவுகிறது. சிக்கலான மருத்துவ செயல்முறைகளை செய்வதற்கு மிகவும் பாதுகாப்பான இடமாக கேத் லேப் செயல்படுகிறது.  உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளுடன் மருத்துவர்களின் மிகச்சிறந்த நிபுணத்துவமும் இங்கு இணைந்திருப்பதால், சிக்கலான சூழ்நிலைகளிலும் உயிர்கள் காப்பாற்றப்படுவதை இது சாத்தியமாக்குகிறது. 63 வயதான இம்முதியவருக்கு மறுவாழ்வை வழங்கியிருக்கிற இதய மற்றும் நுரையீரல் உறுப்பு மாற்று சிகிச்சை துறையின் தலைவர் டாக்டர். குமுத் திட்டால், முதுநிலை இதயவியல் சிகிச்சை நிபுணர் டாக்டர். அனந்தராமன் மற்றும் நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை பிரிவு மற்றும் இதய செயலிழப்பு சிகிச்சைப் பிரிவின் இயக்குனர் டாக்டர். ஸ்ரீனிவாஸ் ராஜகோபாலா மற்றும் மருத்துவ குழுவினர் அனைவரையும் நான் மனமார பாராட்டுகிறேன்.” என தெரிவித்திருக்கிறார்.

KAUVERY HOSPITAL, CHENNAI, HEART TRANSPLANT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்