பெத்த பிள்ளைங்களே இப்டி பண்ணா.. ‘வயசான’ காலத்துல அவங்க எங்கதான் போவாங்க.. சப்-கலெக்டர் எடுத்த ‘அதிரடி’ ஆக்‌ஷன்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வயதான தந்தையை வீட்டிலிருந்து அடித்து துரத்திய மகன்களிடமிருந்து சொத்துக்களை வேலூர் சப்-கலெக்டர் திரும்ப பெற்றுக்கொடுத்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த பொன்னை கிராமத்தைச் சேர்ந்தவர் ரேணுகோபால் (82). ரைஸ்மில் நடத்திவந்த இவருக்கு ரூபசுந்தரி, மலர்விழி, லலிதா என்று மூன்று மகள்களும், கருணாகரன், வெங்கடேசன், வேல்முருகன் என்று மூன்று மகன்களும் உள்ளனர். கடந்த 2008ம் ஆண்டு ரேணுகோபாலின் மனைவி கோமளேஸ்வரி இறந்துவிட்டார். இதில் மனம் நொந்துபோயிருந்த முதியவர் ரேணுகோபாலை, அவரது மூன்று மகன்களும் தாங்கள் பார்த்துக்கொள்வதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.

இதனை அடுத்து தனது பெயரிலிருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை, கடந்த 2013ம் ஆண்டு மூன்று மகன்களுக்கும் பிரித்து கொடுத்துள்ளார். சொத்துகள் கைக்கு வந்த பிறகு தந்தை ரேணுகோபாலை மூன்று மகன்களும் சரியாக கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. சாப்பிட உணவுகூடக் கொடுக்காமல் அடித்துத் துன்புறுத்தியதாக மகன்கள் மீது முதியவர் ரேணுகோபால் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தநிலையில் மகன்களிடமிருந்து தனது சொத்துகளைத் திரும்ப பெற்று தரக் கோரி வேலூர் சப்-கலெக்டரிடம் முதியவர் ரேணுகோபால் மனு கொடுத்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தந்தை என்றும் பாராமல் ரேணுகோபாலை மூன்று மகன்களும் அடித்துத் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து பெற்றோர்-மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் நலவாழ்வுச் சட்டத்தின்படி மகன்கள் பெயரில் ரேணுகோபால் எழுதிக்கொடுத்த பத்திர ஆவணத்தை அதிரடியாக ரத்துசெய்து, மீண்டும் முதியவர் ரேணுகோபாலின் பெயருக்கே சப்-கலெக்டர் கணேஷ் கிரயம் செய்து கொடுத்துள்ளார். இதற்கான உத்தரவு ஆணையை முதியவர் ரேணுகோபாலை நேரில் வரவழைத்து வேலூர் சப்-கலெக்டர் கொடுத்த சம்பவம் அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.

வயதான காலத்தில் பிள்ளைகள் நம்மை பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் பெற்றோர்கள் உள்ளனர். ஆனால் பிள்ளைகளே அவர்களை அடித்து துன்புறுத்தினால் அவர்கள் வேறு எங்கே போவார்கள் என பலரும் வேதனை தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்