'இரவு நேரத்தில் முழு ஊரடங்கா'?... 'சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கா'?... 'அரசு என்ன சொல்ல போகிறது'... எதிர்பார்ப்பில் மக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா பரவலைத் தடுக்க மேலும் பல கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றி தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் இன்று தலைமைச்செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூலை 27-ந்தேதி அதிகபட்சமாக 6,993 பேருக்குத் தொற்று ஏற்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் வரை இதுதான் ஒரு நாளில் ஏற்பட்ட அதிகபட்ச தொற்று எண்ணிக்கையாகப் பதிவாகி இருந்தது.

ஆனால் இந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்து 7,819 ஆக உயர்ந்திருக்கிறது. சென்னையில் மட்டும் ஒரே நாளில் 2,564 பேருக்குத் தொற்று ஏற்பட்டது. இது மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 10 சதவீத வளர்ச்சியில் கொரோனா பரவல் உள்ளது.

இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் பதில் அளித்த தமிழக அரசு, கொரோனா கையை மீறிச் சென்று விட்டதாகக் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலைத் தடுப்பதற்காகத் தமிழக அரசு ஏற்கனவே சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி திருமணம், இறுதிச்சடங்கு, மதம் தொடர்பான கூட்டங்கள் உள்படப் பல நிலைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

மக்களுக்குத் தடுப்பூசி போடுவதிலும் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் பல கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச்செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

இரவு நேரத்தில் ஊரடங்கை அமல்படுத்துவது; சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது, போன்ற கட்டுப்பாடுகளை விதிக்க முடியுமா? என்பது பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. இதற்கிடையே கடந்த வருடம் அமல்படுத்தப்பட முழு ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் தற்போது மீண்டும் முழு ஊரடங்கு வருமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால் அரசு என்ன முடிவெடுக்கப் போகிறது என்பது குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்