அடுத்தடுத்து வரும் தீபாவளி விடுமுறை.. சிறப்பு பேருந்துகள் முன்பதிவு குறித்து வெளியான அறிவிப்பு.. முழு விபரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு விரைவு பேருந்துகளுக்கான முன்பதிவு நேற்று துவங்கியுள்ளது.
ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து தமிழகத்தின் பிற ஊர்களுக்கு செல்ல தமிழக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குவது வாடிக்கை. பண்டிகை காலங்களில் சொந்த ஊர் திரும்பும் மக்களுக்கு இது பேருதவியாக அமைகிறது. இருப்பினும் கூட்ட நெரிசலை தவிர்க்க இந்த பேருந்துகளுக்கு முன்கூட்டியே முன்பதிவு செய்யும் வசதியும் அளிக்கப்பட்டு வருகிறது.
முன்பதிவு
அதன்படி இந்த வருடம் தீபாவளி பண்டிகை அக்டோபர் 24 ஆம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு நேற்றுமுதல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு துவங்கியுள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு போக்குவரத்து கழகத்தின் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது tnstc செயலி வாயிலாக முன்பதிவு செய்துகொள்ளலாம். இது தவிர, பேருந்து நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய போக்குவரத்துத்துறை அதிகாரிகள்,"விரைவு பேருந்துகளை பொருத்தவரை 30 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்ய முடியும். அந்த வகையில், அக்.20-ம் தேதிக்கான முன்பதிவு நேற்று (செப்.20)தொடங்கியது. தீபாவளிக்கு 3 நாட்கள் முன்பு, அதாவது அக்.21-ம்தேதி பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளவர்கள் இன்று (செப்.21) முதல் முன்பதிவு செய்யலாம்" எனத் தெரிவித்துள்ளனர். இதனால் விடுமுறை தினங்களில் சொந்த ஊர் திரும்ப விரும்பும் பயணிகள் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர்.
தசராவுக்கு கூடுதல் பேருந்துகள்
தமிழகத்தில் திருச்செந்தூர் மற்றும் குலசேகரப்பட்டினம் ஆகிய பகுதிகளில் தசரா பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதனை முன்னிட்டு இந்த நாட்களில் சென்னை மற்றும் கோவையில் இருந்து இவ்விரண்டு இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.
அதாவது வரும் அக்.1 முதல் 4 வரை சென்னை, கோவையில் இருந்து திருச்செந்தூர் மற்றும் குலசேகரப்பட்டினத்துக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பண்டிகை முடிந்து திரும்ப ஏதுவாக அக்.6 முதல் 10-ம் தேதி வரை கூடுதல் பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்