'என் பொண்ணுக்கு பிளட் கேன்சர்'...'ஊரடங்கால் தவித்து நின்ற தாய்'... ஒரே ஒரு போன் காலில் நடந்த அற்புதம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ரத்த புற்று நோய்க்குச் சிகிச்சை எடுக்கச் செல்ல முடியாமல் தவித்த இலங்கை அகதியை, காவல்துறை வாகனத்திலேயே சிகிச்சைக்கு அனுப்பி வைத்த, ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் செயல் பலரையும் நெகிழச் செய்துள்ளது.

இலங்கை தலைமன்னாரில் இருந்து இந்தியாவுக்கு அகதியாக வந்த சரோஜினி என்பவர் மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வருகிறார். இவரது 12 வயது மகளுக்கு ரத்த புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 8 மாதங்களாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மாதம் ஒரு முறை மருத்துவமனைக்குச் சென்று ரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்த சூழ்நிலையில் இந்த மாதம் ரத்தப் பரிசோதனை மேற்கொள்ள இருந்த நேரத்தில், கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், அவர்களால் மதுரைக்குச் செல்ல முடியவில்லை.

இந்த சூழ்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வருண் குமார் ஐ.பி.எஸ், தான் பதவியேற்ற நேரத்தில் தன்னுடைய செல்போன் எண்ணை ( 94899 19722) அறிவித்து, எந்த உதவி வேண்டுமானாலும் பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது நினைவுக்கு வந்தது. இதையடுத்து அந்த எண்ணிற்குத் தொடர்பு கொண்ட சரோஜினி, தன்னுடைய மகளின் நிலை குறித்து விளக்கியுள்ளார்.

இதைத்தொடர்ந்து விரைந்து செயல்பட்ட வருண் குமார்,  மண்டபம் தனிப் பிரிவு போலிஸாருக்கு தகவல் கொடுத்து அகதிகள் முகாமில் தங்கியுள்ள குழந்தையின் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். பின்னர் நேற்று அதிகாலை 4 மணியளவில் மண்டபம் அகதிகள் முகாமிலிருந்து, காவல்துறையின் வாகனத்தில் சிறுமியைச் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் சிகிச்சை முடியும் வரை காத்திருந்த காவல்துறை அதிகாரிகள், சிறுமியை மீண்டும் இன்று மதியம் அதே காவல் துறை வாகனத்தில் பாதுகாப்பாக மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து சேர்த்தனர்.

இதுகுறித்து பேசிய சிறுமியின் தாய், ''கடந்த எட்டு மாதங்களாகத் தொடர்ச்சியாக மதுரைக்குச் சென்று சிகிச்சை அளித்து வருகிறோம்.மாதம் ஒருமுறை கண்டிப்பாக ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் மருந்துகள் மாற்றிக் கொடுக்கப்படும். சிகிச்சைக்குச் செல்லாமல் இருந்தால் நோயின் தாக்கம் அதிகரிக்கும். எனேவ  காவல் கண்காணிப்பாளரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு உதவி கோரினேன்.

அவர் உடனடியாக மருத்துவமனை செல்ல காவல்துறையின் வாகனத்தை அனுப்பி மிகப்பெரிய உதவி செய்தார். வருண் குமார் செய்த உதவிக்குப் புலம்பெயர்ந்த இலங்கை அகதிகள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்'' என நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார். சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதோடு நிற்காமல், இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் காவல்துறை செய்யும் உதவி மக்களுக்கும், காவல்துறைக்கும் உள்ள உறவை மேலும் பலப்படுத்தும் என்பதே நிதர்சனம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்