சிகிச்சை பலனின்றி 'என்ஜினியர்' பலி... கொரோனா வைரசால் உயிரிழந்தாரா?... வாட்ஸ்அப் 'வைரலால்' பொதுமக்கள் அதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சிகிச்சை பலனின்றி 22 வயது என்ஜினியர் பலியான சம்பவம் விழுப்புரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

செஞ்சி அருகேயுள்ள மீனம்பூர் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் முஜிபூர்(22). சென்னை சைதாப்பேட்டையில் தங்கி வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. இதையடுத்து அவர் செஞ்சி அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக புதுவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு இறந்தார். இதற்கிடையில் முஜிபூர் கொரோனா வைரசால் உயிரிழந்ததாக வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த அவரின் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் முஜிபூரின் ரத்த மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும், பரிசோதனை முடிவு வந்த பின்னர் தான் அவர் கொரோனா வைரசால் உயிரிழந்தாரா? என்பது தெரிய வரும். அதற்குப்பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் செந்தில் கூறுகையில், '' கடந்த 28-ந்தேதி செஞ்சி மீனம்பூர் கிராமத்தை சேர்ந்த என்ஜினியர் முஜிபூர் உடல் நலக்குறைவால் புதுவை மாநிலம் மதகடிபட்டு பகுதியில் மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக அங்கிருந்து தகவல் வந்தது. அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவர் நேற்று இறந்து விட்டதாகவும் தகவல் கிடைத்தது. உடனே அவரது ரத்த மாதிரி சேகரிப்பட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பரிசோதனை நடந்தது.

மீண்டும் பரிசோதனைக்கு சென்னையில் கிங்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அங்கிருந்து அறிக்கை வந்த பின்னர்தான் முஜிபூர் என்ன காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தார்? என்பது தெரியவரும். மேலும் என்ஜினியர் முஜிபூர் சென்னை தேனாம்பேட்டையில் தங்கி சைதாப்பேட்டையில் வேலை பார்த்து உள்ளார். எனவே மருத்துவ குழுவினர் அங்கு சென்றும் கள ஆய்வு நடத்தி உள்ளனர். முஜிபூர் யார்- யாரிடம் பழகினார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்,'' என தெரிவித்து இருக்கிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்