'சமூகம் பெரிய இடம் போல'... 'நடுக்கடலில் வீசப்பட்ட 'ரூ.7 கோடி' தங்கம்'... இளைஞர்கள் செய்த ட்விஸ்ட் !

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ரூ.7 கோடி மதிப்புள்ள 15 கிலோ தங்கத்தை, 2 இளைஞர்கள் நடு கடலில் வீசிவிட்டு, அந்த இடத்தை  ஜி.பி.எஸ் கருவி மூலம் குறித்து வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆல்வா கொடுக்க நினைத்த அந்த இளைஞர்கள் சிக்கியது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி குறிப்பு.

ராமேஸ்வரம் கடற்கரை பகுதி எப்போதுமே பரபரப்புடன் காணப்படும். சர்வதேச கடல் எல்லைக்கு அருகில் இருப்பதால் கடத்தல் உள்ளிட்ட பல சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்வது உண்டு. அந்தவகையில் ராமேசுவரத்துக்கு படகு மூலம் பெருமளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. அதனை தொடர்ந்து ஹோவர் கிராப்ட் கப்பலில் நேற்று முன்தினம் இரவில், இந்திய கடலோர காவல்படையினர் மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் இணைந்து மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு சென்றனர்.

அந்த நேரத்தில் மண்டபம் அருகே முயல் தீவுக்கும், வேதாளைக்கும் இடைப்பட்ட பகுதியில் கடலில் சென்று கொண்டிருந்த ஒரு பைபர் படகை நிறுத்த முயன்றனர். அப்போது படகில் இருந்த 2 இளைஞர்களும் அதிகாரிகளை பார்த்தவுடன்,  படகை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளார்கள். இதனால் சந்தேகம் அடைந்த  கடலோர காவல்படையினர் அந்த படகை விரட்டி பிடித்தனர். இதையடுத்து மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினத்தை சேர்ந்த ஆசிக், பாரூக் ஆகியோரையும் கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணை நடத்தினர். படகையும் சோதனையிட்டனர். ஆனால் படகில் ஒன்றும் இல்லை.

பின்னர் எதற்காக கடலோர காவல்படையினரை பார்த்ததும் படகை வேகமாக செலுத்தினீர்கள், அதிகாரிகள் நிற்க சொல்லியும் ஏன் நிற்கவில்லை என கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு இருவரும் சரியான பதிலை அளிக்கவில்லை. இதனால் வாலிபர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. அதைப்பின்னர் நடைபெற்ற தீவிர விசாரணையில் இளைஞர்கள் இருவரும் இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகளை கடத்தி வந்தவர்கள் என தெரியவந்தது. அந்த நேரம் பார்த்து கடலோர காவல் படை துரத்த, கடலில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் தங்க கட்டிகளை வீசி விட்டதாக தெரிவித்துள்ளனர்.

அதேநேரத்தில் தங்கம் வீசப்பட்ட கடல் பகுதியை ஜி.பி.எஸ். எனப்படும் கருவியின் உதவியுடன் அடையாளம் காணும் வகையில் அந்த இடத்தை பதிந்து வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நேற்று காலை மண்டபத்தில் இருந்து மீண்டும் ஹோவர் கிராப்ட் கப்பல் மூலம் இந்திய கடலோர காவல்படையினரும், மத்திய வருவாய் புலனாய்வு துறையினரும் அந்த வாலிபர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு நடுக்கடலுக்கு புறப்பட்டனர். தங்கத்தை வீசியதாக கூறப்பட்ட இடத்தை அவர்கள் அடையாளம் காட்டினர்.

நீச்சல் பயிற்சியில் நிபுணத்துவம் பெற்ற இந்திய கடலோர காவல்படையினர் 3 பேர், கப்பலில் இருந்து கடலில் குதித்து ஆழத்துக்கு சென்று 5 பார்சல்களை எடுத்து வந்தனர். அந்த பார்சல்கள் கருப்பு நிறத்தில் இருந்தன. அவற்றின் உள்ளே ஏராளமான தங்கக்கட்டிகள் இருந்தன. பின்னர் நகை மதிப்பீட்டாளர் வரவழைக்கப்பட்டு எடை போட்டதில் மொத்தம் 15 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. இதன் சர்வதேச மதிப்பு ரூ.7 கோடி என்று கூறப்படுகிறது.

கடந்த 5 வருடத்துக்கு பிறகு இவ்வளவு அதிகமான கடத்தல் தங்கம் ராமேசுவரம் பகுதியில் பிடிபட்டிருப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா பாணியில் ட்விஸ்ட் செய்து தங்கம் கடந்த முயன்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RAMESWARAM COASTAL, MANDAPAM, INDIA COAST GUARD, GOLD, SMUGGLING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்