'உடைந்தது பிம்பம்'!.. "கடவுள்" என சொல்லிக் கொண்டவர்... கம்பி எண்ணும் நிலை!.. 'சிவசங்கர் பாபாவின் தலையெழுத்தை மாற்றிய 3 மாணவிகள்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தன்னை "கடவுள்" என்று அறிவித்துக்கொண்ட சிவசங்கர் பாபா, தற்போது பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தின் பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகே உள்ள சாத்தங்குப்பம் பகுதியில் உள்ள சுசில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் கடந்த 20 ஆண்டுகளாக அந்த பள்ளியை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் 3 பேர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, இதுபோன்ற பாலியல் வழக்கில் சிக்கி சென்னையில் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சிவசங்கர் பாபா மீதான வழக்கை செங்கல்பட்டு சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். சிவசங்கர் பாபா, உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரிடம் நேரடியாக விசாரணை நடத்தி கைது செய்து அழைத்து வர, துணை போலீஸ் சூப்பிரண்டு குணவர்மன், இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் உடனடியாக டேராடூன் விரைந்தனர்.

                     

சிவசங்கர் பாபா டேராடூனில் உள்ள மருத்துவமனையில் இருதய நோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். அதையொட்டி, சிபிசிஐடி தனிப்படை போலீசார் டேராடூன் சென்று விசாரணை நடத்தினர். அப்போது சிவசங்கர் பாபா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்று விட்டது தெரியவந்தது. அவர் டெல்லி போய் விட்டதாகவும் கூறப்பட்டது. உடனே சிபிசிஐடி போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் டெல்லி போலீசாரை உஷார்படுத்தினார். அதற்குள் தமிழக சிபிசிஐடி தனிப்படை போலீசாரும் டெல்லி விரைந்தனர்.

அதைத் தொடர்ந்து, சிவசங்கர் பாபாவின் செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்தபோது அவர் டெல்லி சித்தரஞ்சன் பார்க் பகுதியில் தனது சீடர் ஒருவரின் உதவியுடன் தனியார் சொகுசு விடுதி ஒன்றில் தங்கி இருப்பது தெரியவந்தது.

                               

அவரை டெல்லி போலீசார் உதவியுடன், சிபிசிஐடி போலீசார் நேற்று அதிகாலை சுற்றி வளைத்து கைது செய்தனர். அங்குள்ள 30 விடுதிகளை சோதனையிட்ட பிறகே, சிவசங்கர் பாபா தங்கி இருந்த விடுதியை போலீசார் கண்டுபிடித்தனர். கைதான சிவசங்கர் பாபாவிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

பின்னர், அவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு உடல் பரிசோதனை செய்தபின்னர், டெல்லி கோர்ட்டில் நேற்று பிற்பகலில் சிவசங்கர் பாபா ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிவசங்கர் பாபாவை தமிழகம் அழைத்து செல்ல கோர்ட்டு அனுமதி அளித்தது. இதையடுத்து அவரை, விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வந்தனர்.

சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி இருந்த சிவசங்கர் பாபா, எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரிடம் தீவிரமாக விசாரித்து வரும் போலீசார், அதனை வீடியோவில் பதிவு செய்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட 3 முன்னாள் மாணவிகள் அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து சிவசங்கர் பாபாவிடம் நூற்றுக்கணக்கான கேள்விகள் சரமாரியாக எழுப்பப்பட்டன. இதில் பல கேள்விகளுக்கு பதில் அளித்த சிவசங்கர் பாபா, சில கேள்விகளுக்கு மவுனம் காத்துள்ளார்.

சிவசங்கர் பாபாவிடம் நடத்தப்பட்ட விசாரணை விவரங்களை வழக்கின் முக்கிய ஆதாரங்களாக சேர்த்துள்ள போலீசார், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.

பின்னர், இன்று காலை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் இருந்து சிவசங்கர் பாபா செங்கல்பட்டு கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிவசங்கர் பாபாவிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்த வேண்டி உள்ளதால் அவரை ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக கோர்ட்டில் மனு ஒன்றையும் தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெற உள்ளது. அதன் பிறகு சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபாவை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.

இதற்கிடையே சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நலக் குழுமம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இப்பள்ளியைவிட்டு வெளியேறும் மாணவர்களுக்கு வேறு பள்ளியில் சேர்த்திட கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்கும்படியும், பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் எனவும் குழந்தைகள் நலக் குழுமம் வலியுறுத்தியுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்