'சென்னை மாநகருக்கு புதிய காவல் ஆணையர்'... உளவுத் துறைக்கு வந்தார் டேவிட்சன் தேவாசீர்வாதம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை மாநகர காவல் ஆணையாளராக இருந்த மகேஷ்குமார் அகர்வால் உள்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில் தலைமைச் செயலாளராக வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார். இதேபோல் தமிழக முதல்வரின் செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். தொல்லியல்துறை ஆணையராக இருக்கும் உதயச்சந்திரன் முதல்வரின் முதலாவது முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.

இதேபோல் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக இருக்கும் உமாநாத், முதல்வரின் இரண்டாவது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வரின் மூன்றாவது செயலாளராக எம்.எஸ். சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தற்போது அருங்காட்சியகங்கள் துறையின் ஆணையராகப் பணியாற்றி வருகிறார். புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் முதல்வரின் நான்காவது செயலாளர் என்ற பதவியில் அனு ஜார்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது தொழில்துறை ஆணையராகப் பணியாற்றி வருகிறார்கள்

.

இதற்கிடையே ஐபிஎஸ் அதிகாரிகள் மட்டத்திலும் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய காவல் ஆணையராக ஐ.பி.எஸ். அதிகாரி சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டு உள்ளார். 1990ம் ஆண்டு பேட்ச் அதிகாரியான இவர் தற்போது ஆயுதப் படையின் கூடுதல் ஏடிஜிபியாக பணியாற்றி வருகிறார்.

வீரப்பனைப் பிடிக்க அமைக்கப்பட்ட சிறப்பு இலக்க காவல் படையில் (STF) 6 ஆண்டுகள் ஈரோடு சத்தியமங்கலத்தில் சங்கர் ஜிவால் பணியாற்றியுள்ளார். இவர் திருச்சியில் காவல் ஆணையராக பணியாற்றிய போது பூட்டிய வீடுகளைக் கண்காணிக்க இவர் கொண்டு வந்த எஸ்எம்எஸ் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றது. உள்நாட்டு பாதுகாப்பு பிரிவில் ஐஜியாக பணியாற்றிய போது பல தொழில்நுட விடயங்களைப் புகுத்தியதில் பெரும் பங்கு சங்கர் ஜிவாலுக்கு உண்டு.

இவர் 2004-2006ம் ஆண்டு போதைப் பொருள் தடுப்பு பிரிவில் இயக்குநராக (தெற்கு) பணியாற்றிய நேரத்தில் நாட்டிலேயே அதிகமான அளவில் ஹெராயினை கைப்பற்றினார். இவரது சீரிய பணிக்காக 2019ம் ஆண்டு குடியரசுத் தலைவரின் பதக்கத்தையும் சங்கர் ஜிவால் பெற்றுள்ளார். தற்போதைய சென்னை மாநகர ஆணையராக உள்ள மகேஷ் குமார் அகர்வால், இரவில் ரோந்து செல்லும் அதிகாரிகளின் தொடர்பு எண்களைச் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டது, காணொளி காட்சி மூலம் பொதுமக்களின் குறைகளைக் கேட்டது போன்ற பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளார்.

மேலும் தமிழக உளவுத்துறை ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 1995ம் ஆண்டு பேட்ச் அதிகாரியான  டேவிட்சன், உளவுத் துறையில் நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர். சிறப்புப் பிரிவு, பாதுகாப்பு பிரிவு, தீவிரவாதிகளைக் கண்காணிக்கும் கியூ பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மதுரை மாநகர காவல்துறை ஆணையர், ஐஜி நிர்வாகம், ஐஜி மேற்கு மண்டலம், போதைப் பொருள் தடுப்பு இயக்குநர் தெற்கு, இயக்குநர் சென்னை போலீஸ் அகாடமி என பல பணிகளில் டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியாற்றியுள்ளார்.

தற்போது கோவை மாநகர ஆணையராக பணியாற்றி வரும் டேவிட்சன் தேவாசீர்வாதம், பல வருடங்களாகக் காவல்நிலையங்களில் பணியாற்றி வந்த உளவு காவலர்கள் மீது புகார் வந்த நிலையில் அவர்களை அதிரடியாக மாற்றி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தமிழக சட்டம் ஒழுங்கு  ஏடிஜிபி ஜெயந்த் முரளி மாற்றப்பட்டு தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

தற்போது காவலர் நலனில் ஏடிஜிபியாக பணியாற்றி வரும் தாமரைக் கண்ணன், சென்னை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்த நேரத்தில் சென்னையில் வங்கி கொள்ளையர்கள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்