கணவரின் திடீர் செயலால் அதிர்ந்த மனைவி.. ‘சந்தேகத்தை கூகுளில் தேடியதுதான் காரணம்’ என்று வாக்குமூலம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் குழந்தைகளை கொன்றுவிட்டு மனைவியை கொல்வதற்கு முயற்சித்த கணவரது செயல் அதிர வைத்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த செங்கமலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காளிராஜ் என்பவர் அரசு கால்நடை மருத்துவமனையில் கால்நடை ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். 2013 ஆம் ஆண்டு தங்கபுஷ்பம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு மாரீஸ்வரன், காயத்ரி என்கிற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

எனினும் காளிராஜ் வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததாகவும் அந்தப் பெண் ஒரு பாலியல் தொழிலாளி என்பதால் அவருடைய பால்வினைநோய் தனக்கு வந்துவிடுமோ என்கிற பயத்தில் மனைவியுடனான தாம்பத்தியத்தை தவிர்த்து வந்ததாகவும் தெரிகிறது. இந்த அச்சத்தின் காரணமாக சிவகாசி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் குடும்பத்தோடு சென்று மருத்துவ பரிசோதனையும் அவர் செய்து கொண்டார்.‌

ஆனால் அவருக்கு அவ்வாறான நோய்கள் எதுவும் இல்லை என்று முடிவுகள் வந்தன. எனினும் எச்ஐவி தொற்று பல ஆண்டுகளுக்கு வெளியே தெரியாமல் இருந்து பின்னர் வெளியே தெரிய வாய்ப்பிருப்பதாக எங்கேயோ அவர் படித்ததால் இதுபற்றி கூகுளில் விடைதேட அவருக்கு சந்தேகங்கள் வலுத்தன.அப்போது பால்வினை நோய் மற்றும் எச்ஐவி தொற்று அறிகுறிகள் என கூகுளில் சொல்லப்பட்டு இருந்தவை தனக்கும் இருப்பதாக அவர் நினைத்துக் கொண்டார்.

எந்நேரமும் இதை குறித்து சிந்தித்த காளிராஜ், இந்த நோயை வைத்துக்கொண்டு உயிர்வாழ முடியாது என்று எண்ணி குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். இதை அவர் மனைவியிடம் அவர் கூற வீட்டில் சண்டை எழுந்தது. இதனால் இரண்டு மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் நிம்மதி இழந்த காளிராஜ் பட்டாசு வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய தனது மனைவிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் குழந்தைகள் இருவரையும் கொன்றுவிட்டு தானும் புலம்பியபடி அமர்ந்துள்ளார்.

அப்போது மனைவி வந்ததும் கடப்பாரையால் மனைவியை தாக்க முயன்றுள்ளார் காளிராஜ். அப்போது அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி உள்ளார் அவரது மனைவி. இதனால் அக்கம் பக்கத்தினர் கூடினர். இதனிடையே தற்கொலை செய்துகொள்ளும் முடிவில் இருந்த காளிராஜ் மக்களிடம் சிக்காமல் ஓடி விட்டார். அதன்பின்னர் காளிராஜன் மனைவி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காளிராஜ் கைது செய்யப்பட்டார். மேலும் தான் கொலை செய்ய முடிவெடுத்ததுக்கு கூகுள் தான் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்