‘மதுரைக்காரன் பாசக்காரன், ரோஷக்காரன்’.. ‘எதையுமே வித்தியாசமாக செய்பவன்’!.. அசரவைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு விழாவுக்கு தொண்டர்களை மதுரையில் இருந்து சென்னைக்கு தனி ரயிலில் அழைத்துச் சென்று அமைச்சர் செல்லூர் ராஜூ அசத்தியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினாவில் அமைக்கப்பட்டுள்ளது. பீனிக்ஸ் பறவை வடிவில் 80 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டிருக்கும் இந்த நினைவிடத்தை காலை 11 மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்கு கட்சித் தொண்டர்களை தனி ரயில் மூலம்  அமைச்சர் செல்லூர் ராஜு சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். மதுரை மாநகர் பகுதியைச் சேர்ந்த சுமார் 1500 அதிமுக தொண்டர்கள் மற்றும் குடும்பத்தினருடன், அமைச்சர் செல்லூர் ராஜுவும் ரயிலில் சென்னைக்கு பயணித்துள்ளார். அவர்கள் அனைவரும் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் பங்கேற்ற பின்னர், மாலை 5.30 மணிக்கு மதுரைக்கு திரும்பி செல்லவும் தனி ரயில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘ஏற்றுக்கொண்ட, தலைவருக்கு நன்றியை வெளிப்படுத்துவதை வித்தியாசமாக செய்ய வேண்டும். அதனால்தான் தமிழகத்தில் முதல்முறையாக கட்சித் தொண்டர்களை ரயிலில் அழைத்து செல்கிறேன். அவர்களுடன் நானும் செல்கிறேன். நான்-ஸ்டாப் ஆக எங்கள் ரயில் சென்னைக்கு செல்கிறது. மதுரைக்காரன் பாசக்காரன், ரோஷக்காரன். எதையுமே வித்தியாசமாக செய்பவன். ஜெயலலிதா மீது பற்றுள்ளவன். எங்கள் அம்மா ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டி தந்துள்ளார் முதல்வர். அதைக்காண தொண்டர்களை அழைத்து செல்கிறேன்’ என கண்கலங்க கூறினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்