'எங்கள் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசு'... 'தமிழக அரசுக்கு நன்றி சொன்ன சீமான்'... வெளியான அறிக்கை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானைச் சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. இந்த நாளை பொது விடுமுறை நாளாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானைச் சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா.

இவ்விழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கேரள மாநிலத்திலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களுக்கு நான் சுற்றுப்பயணம் சென்றபோது, இலங்கை மற்றும்  மொரீஷியஸ் நாடுகளில் தைப்பூசத் திருவிழாவிற்கு பொது விடுமுறை அளிப்பது போன்று தமிழ்நாட்டிலும் தைப்பூசத் திருவிழாவிற்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர்.

இக்கோரிக்கையைப் பரிசீலித்து ,வரும் ஜனவரி 28ம் நாள் அன்று கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை, பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும், இனிவரும் ஆண்டுகளிலும் தைப்பூசத் திருவிழா நாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு முதலமைச்சர் பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தைப்பூச திருநாளைத் தமிழக அரசு பொது விடுமுறை நாளாக அறிவிக்க நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. தற்போது தமிழக அரசு அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நாம் தமிழர் கட்சியின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, தமிழர் இறைவன் முப்பாட்டன் முருகப் பெருந்தகையைப் போற்றிக் கொண்டாடும் தைப்பூசத் திருநாளை அரசு விடுமுறையாக அறிவித்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. தமிழக அரசுக்கு மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்