'தான் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை'... 'கொரோனா நிதிக்காகக் காவலாளி செய்த செயல்'... நெகிழ்ந்துபோன ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் தங்கதுரை என்பவர் செய்த செயல் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குங்கள் என்று பொதுமக்கள், சமூக அமைப்புகள் மற்றும் பெருந்தொழில் நிறுவனங்களுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேண்டுகோள் விடுத்தார். இதுதொடர்பான வெளியிடப்பட்ட அறிக்கையில், பேரிடர் காலத்தில் அளிக்கக்கூடிய நன்கொடைகள் அனைத்தும் ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் சேமிப்பு நிலையங்கள் அமைத்தல், தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ கருவிகள் வாங்கப் பயன்படும்.

நன்கொடை விவரங்கள் மற்றும் இந்த நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் வெளிப்படையாகப் பொதுவெளியில் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டது. இதனையடுத்து தொழிலதிபர்கள், அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள், பொதுமக்கள், சினிமா துறையினர் ஆகியோர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் தற்காலிக இரவு நேர பணியாற்றி வரும் தங்கதுரை என்பவர் கொரோனா நிவாரண நிதியாகத் தனது ஒரு மாத சம்பளமான ரூ.10,101 வழங்கி பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். மயிலாடுதுறையைச் சேர்ந்த தங்கதுரை தற்போது சென்னை சாலிகிராமத்தில் தங்கி பணியாற்றி வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மிதிவண்டியில் வந்து முதலமைச்சரை நேரில் சந்தித்து நிதி வழங்க விரும்பியுள்ளார்.

அலுவல் காரணமாக அவரை சந்திக்க முடியாததாதல் அரசுக் கணக்கில் அந்த பணத்தைச் சேர்த்துள்ளார். இந்த தகவலை அறிந்து நெகிழ்ந்துபோன தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தங்கதுரையை நேரில் அழைத்து நிதி வழங்கியதற்காகத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். மேலும் புத்தகம் ஒன்றையும் அவருக்குப் பரிசாக வழங்கியுள்ளார்.

மற்ற செய்திகள்