‘அம்மா இருக்கேன் பயப்படாதே’.. 16 மணிநேரத்துக்கும் மேல் தொடரும் மீட்பு போராட்டம்' #SaveSujith பிரார்த்திக்கும் தமிழகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என பலரும் தங்களது கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் நேற்று மாலை விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் சுஜித் எதிர்பாராதவிதமாக விழுந்துள்ளான். 5 ஆண்டுகளுக்கு முன்பே தோண்டப்பட்டு பயன்பாட்டில் இல்லாமல் திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் சுமார் 26 அடி பள்ளத்தில் சிக்கிக்கொண்டான். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் குழந்தையை மீட்கும் பணியில் இறங்கினார்.

இதனைத் தொடர்ந்து குழந்தை பயப்படாமல் இருக்க அவரது தாய் மற்றும் உறவினர் பேச்சு கொடுத்துக்கொண்டே இருந்தனர். அப்போது சுஜித்தின் தாய் கலாமேரி,  ‘அம்மா இருக்கேன் பயப்படாதே’ என சொன்னதும் ‘ம்ம்’ என சுஜித் பதிலளித்துள்ளான். ஆழ்துளை கிணற்றுக்கு அருகே பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனிடையே மதுரையை சேர்ந்த மணிகண்டன் உருவாக்கிய பிரத்யேக இயந்திரத்தின் மூல குழந்தையை மீட்கும் பணி நடைபெற்றது. இரவு சுமார் 10:30 மணியளவில் இயந்திரத்தின் வழியாக கயிறு விடப்பட்டு குழந்தையின் கைகளில் சுருக்கு போட்டு மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒரு கையில் சுருக்கு மாட்டிய நிலையில் மற்றொரு கையில் சுருக்கும் மாட்டும் போது கயிறு தவறிவிட்டது. இதனால் மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இந்நிலையில் மீட்பு பணி நடைபெறும் இடத்தில் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், வெல்லமண்டி என்.நடராஜன், வளர்மதி மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கண்காணித்தும் ஆலோசனை வழங்கியும் வருகின்றனர். சுமார் 16 மணி நேரங்களுக்கு மேலாக நடைபெற்ற மீட்பு பணியில் திடீரென ஆழ்துளை கிணற்றில் மண் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர், குழந்தை சுஜித்தின் சத்தத்தை தற்போது எங்களால் கேட்க முடியாதது கவலை அளிக்கிறது. ஆழ்துளை கிணற்றில் மண் விழுந்ததால் பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் குழந்தையை பத்திரமாக மீட்டு விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார். 26 அடியில் இருந்த குழந்தை 70 அடிக்கும் கீழே சென்றுவிட்ட நிலையில் பத்திரமாக சுஜித் மீட்கப்பட வேண்டும் என பலரும்  #PrayForSujith #RescueChild #SaveSujith என்ற ஹேஸ்டேக்குகளை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

SAVESUJITH, PRAYFORSUJITH, TRICHY, BOREWELL, RESCUECHILD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்