"ஜாதி பாக்கமாட்டோம்னு சொன்னிங்களேயா?..." கர்ப்பமான பொண்ணுன்னு கூட பாக்காம.... சேலம் மலைவாழ் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சேலம் மலைவாழ் பழங்குடியினப் பெண்ணை  மாமியார் வீட்டினர் சித்ரவதை செய்து விஷம் கொடுத்து கொன்று விட்டதாக உறவினர்கள்  அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் கருமந்துறை அடிவாரத்தில் உள்ள பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி வள்ளியம்மாள். இவர்களுக்கு ராஜேஸ்வரி, பிரியதர்ஷினி என்கிற 2 மகள்கள் உள்ளனர்.

மூத்த மகள் ராஜேஸ்வரிக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் என்பவருக்கு மணம் முடிக்க பெண் கேட்டு வந்துள்ளனர். இப்பகுதியில், குறிப்பிட்ட மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பழங்குடியினப் பெண்களைத் திருமணம் செய்துகொள்வது வழக்கம். ஆனால், அவ்வாறு நடைபெறும் திருமணங்கள் நிலைப்பதில்லை என்றும், சாதிக்கொடுமை காரணமாக பெண்கள் துன்புறுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டு ராஜேஸ்வரியின் தந்தை மறுத்துள்ளார்.

'இல்லை, நாங்கள் சாதி பார்க்க மாட்டோம். பிள்ளையைச் சரியாக வைத்துக்கொள்கிறோம்' என்று மாப்பிள்ளை வீட்டார் உறுதி கொடுத்ததால் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார்.

அதையடுத்து, கடந்த வருடம் செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது. திருமணம் ஆன ஒரு மாதத்திலேயே பிரச்னை செய்யத் தொடங்கினார்கள். ராஜேஸ்வரியின் தட்டு, டம்ளர் உட்பட அவள் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களையும் கொண்டுபோய் மாட்டுக் கொட்டகையில் வைத்திருக்கிறார்கள். மாட்டுக் கொட்டகையில் படுக்கவும் வைத்திருக்கிறார்கள். இதனால் அவர்களிடம் கோபித்துக்கொண்டு ராஜேஸ்வரி பாப்பநாயக்கன்பட்டிக்கு வந்துவிட்டார். இதையடுத்து, ராஜேஸ்வரியை வற்புறுத்தி மாப்பிள்ளை வீட்டுக்கு பெற்றோர் திருப்பி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், ஒரு வாரத்திற்கு முன்பு, வயிற்று வலி  என்று சொல்லி ராஜேஸ்வரியை ஆத்தூர் மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார்கள். அதையடுத்து, பழனிவேலின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கே வரவில்லை. உறவினர்கள் சென்று பார்த்தபோது, மருத்துவர்கள் கோவை மெடிக்கல் சென்டருக்கு அழைத்துப் போகுமாறு குறிப்பிட்டுள்ளனர்.

அவர்கள 3 லட்சம் கேட்டதையடுத்து, பணம் கட்ட முடியாமல் சேலம் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கிருக்கும் மருத்துவர்களும் விஷம் குடித்திருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் ராஜேஸ்வரி, "தான் விஷம் குடிக்கவில்லை என்றும் அவர்கள் தான் விஷம் கலந்து கொடுத்திருப்பார்கள்" என்றும் கூறி கதறி அழுதுள்ளார். இந்நிலையில், நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

''என் மகளை கல்யாணம் பண்ணிட்டுப் போய் இப்படி விஷம் கொடுத்துக் கொலை செஞ்சுட்டாங்களே, நாங்க பெண்ணை கொடுக்க மாட்டோமுன்னு தானே சொன்னோம். இவங்களே கல்யாணம் பண்ணிட்டுப் போய் கொன்னுட்டாங்களே. என் குழந்தை கல்யாணம் ஆகி 4 மாசத்தில் பலமுறை கொடுமை செய்வதாகச் சொல்லி வீட்டுக்கு வந்தாள். இங்கேயே வைத்திருந்தால் என் குழந்தை இறந்திருக்காதே...''என்று கதறி மயங்கிவிழுந்தார் ராஜேஸ்வரின் அம்மா வள்ளியம்மாள்.

பழனிவேல் குடும்பத்தை வன்கொடுமை சட்டத்தில் கைதுசெய்யும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் எனக் கூறி ராஜேஸ்வரியின் உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

TRIBAL WOMAN, KILLS, MOTHER-IN-LAW, RELATIVES PROTEST

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்