'நைட்டு 11 மணி ஆச்சு'...'மொபைல்'ல இத தான் பாத்துகிட்டு இருக்கியா'...தந்தைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

செல்போனில் நீண்ட நேரம்  ‘சாட்’ செய்து கொண்டிருந்ததைப் பார்த்த தந்தை கோபப்பட்டதால் மாணவி செய்த செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன். அச்சகம் மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம் நடத்தி வரும் இவருக்கு, ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு பிரசாந்த் என்ற மகனும், ரக்‌ஷா என்ற மகளும் இருந்தனர். மகன் பிரசாந்த் என்ஜினீயராக உள்ள நிலையில், மகள் ரக்‌ஷா, சேலம் அருகே கொங்குநாடு மகளிர் கலைக் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் பட்டப்படிப்பு படித்து வந்தார். இதனிடையே மகள் ரக்‌ஷா நீண்ட நாட்களாக செல்போன் வேண்டும் எனத் தனது தந்தையிடம் கேட்டுள்ளார்.

இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாணவி ரக்‌ஷாவுக்கு அவருடைய தந்தை, புதிய மாடல்  ‘ஆண்ட்ராய்டு’ செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்தார். அந்த செல்போனை மாணவி பயன்படுத்தி வந்துள்ளார். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு ரக்‌ஷா செல்போனில் தனது தோழிகளுடன் ‘சாட்’ செய்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கவனித்த அவரது தந்தை ''இரவு 11 மணி ஆச்சு. இன்னும் மொபைல்ல என்ன பண்ணிக்கிட்டு இருக்க'' என கோவத்தில் கேட்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த மாணவி தனது அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டார். தனது தந்தை திட்டி விட்டாரே என மனவேதனையிலிருந்த மாணவி ரக்‌ஷா, சுடிதார் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே நேற்று காலை நீண்ட நேரமாகியும் தங்கள் மகள் கதவைத் திறக்காததால் தாழ்ப்பாளை உடைத்து அறைக்குள் சென்று பெற்றோர் பார்த்தனர். அங்கு மாணவி தூக்கில் பிணமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கதறித் துடித்தார்கள்.

இதற்கிடையே சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் மாணவியின் பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகச் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தூங்காமல் செல்போன் உபயோகித்துக் கொண்டிருக்கிறாயே எனத் தந்தை கண்டித்ததற்கு மாணவி தற்கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SUICIDEATTEMPT, COLLEGESTUDENT, MOBILE, SALEM, COLLEGE GIRL, DAD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்